சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ குட்கா பான்பராக் போன்ற மெல்லும் புகையிலை தொடர்பான போதை வஸ்துகளால் இளைஞர்களுடைய வாழ்க்கை மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகுவதை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கினை தொடர்ந்தார்.


உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் வாதத்தினை ஏற்று, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடையை விதித்து உத்தரவு வழங்கி இருக்கிறது,


இந்த உத்தரவின் மூலம் குட்கா பான்பராக் போன்ற மெல்லும் புகையிலை பொருட்களின் மீதான தடையை நீடிக்கிறது. தமிழ்நாட்டில் இவைகள் விற்கப்படுவதற்கான தடை என்பது தொடர்கிறது.


ஊழல் மயமான அதிமுக ஆட்சி


கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் - இதுதான் அதிமுக ஆட்சியின் கொள்கையாகவே இருந்தது. இதை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே எங்கள் தலைவர் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்பலப்படுத்தினார். தற்போது மத்திய கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை அதனை உறுதிப்படுத்தியுள்ளது,


கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியாளர்கள் ஜெயலலிதாவிற்கு அடிமையாக இருந்தவர்கள். பிறகு சசிகலாவுக்கு அடிமையானார்கள். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தினகரனுக்கு அடிமையானார்கள். ஒன்றிய அரசை ஆளும் பாஜகவினர் நெருக்கடியை தொடர்ந்து மோடி-அமிஷா அடிமையானார்கள். காப்பாற்றுவதற்கு டெல்லியில் எஜமானர் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டார்கள்.


ஊழல் செய்வதற்காகவும் வாழல் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவும் இணைந்த ஊழல் கறைப்படிந்த கரங்கள் தான் பாஜக-அதிமுக கூட்டணி கைகள், கடந்த 2016-2021ம் ஆண்டிற்கு இடைப்பட்ட அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு நிர்வாக சீர்கேடுகளும், முறைகேடுகளும் வியாபித்திருந்தன என்பதற்கு சிஏஜி அறிக்கை ஒரு முக்கிய ஆதாரம்.


எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த துறையில் பெரும் ஊழல்


* போன்ற முக்கியத்துறைகளுக்கு தனியாக அமைச்சர்களை நியமிப்பதுதான் வழக்கம். ஆனால் கடந்த ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களை தனது சம்பந்திக்கும். குடும்பத்தினருக்கும் ஒதுக்குவதற்காக அந்த இரண்டு துறைகளையும் தன்னிடமே வைத்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி என்ற சந்தேகங்களை உண்மையாக்கி இருக்கின்றன சிஏ.ஜி அறிக்கையில் உள்ள அதிர்ச்சி தகவல்கள்.


இபிஎஸ் கைவசம் இருந்த பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில், ஊழல் எப்படியெல்லாம் ஊக்கப்படுத்தப்பட்டது என்பதை புள்ளிவிபரங்களோடு சுட்டிக்காட்டியிருக்கிறது சிஏஜி அறிக்கை.


* முறைகேட்டின் உச்சமாக 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் 57 கணினிகளை பயன்படுத்தி 87 ஒப்பந்ததாரர்கள் டெண்டர் தாக்கல் செய்துள்ளனர்.


* இந்த காலகட்டத்தில் 2091 டெண்டர்கள் ஒரே கணினியை பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது.


*நெடுஞ்சாலை துறையில் 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டில் கோரப்பட்ட 907 ஒப்பந்த புள்ளியில் ஒவ்வொரு ஒப்பந்த புள்ளிக்கும் 2 முதல் 4 டெண்டர்கள் ஒரே ஐபி முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன. * ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 490 டெண்டர்கள் ஏற்கப்பட்டு பணிகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சிஏஜி, இது ஒரு அப்பட்டமான விதிமீறல் என கண்டனம் தெரிவித்துள்ளது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்த்து பொய்யான, போலியான ஒப்பந்ததாரர்களை ஏலத்தில் பங்கேற்றதுபோல் கணக்கு காண்பித்து இபிஎஸ் குடும்பத்தினர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.


* கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களை பெறுவதில் ஆதிக்கம் செலுத்திய செய்யாத்துறை மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது கணக்கில் காட்டப்படாத 183 கோடி ரூபாய் பணம், 105 கிலோ தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. எனினும் 2019 முதல் 2021ம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப் பணித்துறையில் ஏராளமான ஒப்பந்தங்களை அவரது. எஸ்.பி.கே. நிறுவனத்திற்கு எடப்பாடி பழனிசாமி அரசு வழங்கியுள்ளது. மதுரை திருமங்கலம் உப கோட்டத்தில் தொகுதி 78 சாலைகளை வலுப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டது. இதில் ஜாவித் ஹூசைன், லக்கி அசோசியேட்ஸ், சுகன்யா கட்டுமானங்கள் ஆகிய 3 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் ஜாவித் ஹூசைனும் லக்கி அசோசியேட்ஸ் பங்குதாரர் ஜமீம் பானுவும் கணவன், மனைவி.


*கமிஷன், கலெக்சன், கரப்சன் என்கிற மூன்று தத்துவங்களையே அடிப்படையாக கொண்டு செயல்பட்ட இபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசு இதுபோன்ற விதிமீறல்களை கண்டுகொள்ளவில்லை.


ஊரக வளர்ச்சித்துறையிலும் ஊழல் - முறைகேடு


*பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற்காக கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் விளம்பரங்கள் வெளியிட்டதில்கூட 2.18 கோடி ரூபாய் முறைகேடு என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது,


* 2016 ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 5.09 லட்சம் வீடுகள் கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் கட்டிமுடிக்கப்பட்டதோ 2.8 லட்சம் வீடுகள்தான். இதிலும், தகுதியானவர்களுக்கு வீடு கொடுக்காமல் தகுதியற்ற பயனாளிகளுக்கு முறைகேடாக வீடுகளை ஒதுக்கப்பட்டுள்ளது.


* இந்த திட்டத்தின்கீழ் பயனடைய வேண்டிய பட்டியலின மற்றும் பழங்குடியின பயனாளிகளை உரியமுறையில் அடையாளம் காணவில்லை என அடுக்கடுக்கான புகார்களை கடந்த அதிமுக ஆட்சி மீது வைத்துள்ளது சிஏஜி அறிக்கை.


சமூகநீதியை சிதைத்து அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்


* அதிமுக ஆட்சியின் அவலம் குறித்து சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மற்றொரு அதிர்ச்சியூட்டும் அம்சம் சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளே முறைகேடாக திட்டமிடலில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் கவனக்குறைவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு அளிக்க நிர்ணயம் செய்யப்பட்ட 60 சதவீத வீடுகள் என்ற இலக்கை அடைய முடியவில்லை. என்று சிஏஜி தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.


கணிசமான எண்ணிக்கையிலான எஸ்சி, எஸ்டி குடும்பங்கள் சமூக பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு Socio Economic and Caste Census - SECC) தரவுகளில் இருந்து அகற்றப்பட்டனர் என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலையும் தமது அறிக்கையில் சிஏஜி வெளியிட்டுள்ளார்.


* சமூக பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு Socio Economic and Caste Census - SECC) தரவின் பெயர் புலத்தில், தெரியாது என்ற உள்ளீட்டை தவறாக பயன்படுத்துவது மூலம் மட்டுமே 50.28 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.


* இந்த முறையில் கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்ற பயனாளிகளுக்கு 3,354 வீடுகள் முறைகேடாக ஒப்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தலைமை கணக்காயர் குற்றம்சாட்டியுள்ளார், மாநில அளவில் ஆய்வு மேற்கொண்டால் முறைகேடாக அனுமதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.


காவல்துறைக்கு மொத்தம் 14.37 கோடி ரூபாய் வீண் செலவு


*கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கை கட்டிக்காப்பதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு எந்த அளவிற்கு அலட்சியமாக இருந்திருக்கிறது என்பதையும் தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை தோலுரித்து காட்டியுள்ளது.


* ஒன்றிய அரசின் 60 சதவீத பங்களிப்பு, மாநில அரசின் 40 சதவீத பங்களிப்புடன் காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது.


* கடந்த 2015ஆம் ஆண்டு காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளை நவீனப்படுத்துதல்(APCO), சென்னையில் சிசிடிவி காமிராக்களை பொருத்துதல் ஆகிய இரண்டு திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது.


83,46 கோடி ரூபாய் மதிப்பிலான APCO திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்ட கருவிகளை பயன்படுத்தாமலேயே பல ஆண்டுகள் வைத்திருந்ததால் அவை பழுதுபட்டு அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. * சிசிடிவி கண்ட்ரோல் அறை உள்ளிட்டவைக்கு கருவிகள், அலைக்கற்றை கட்டணம் போன்றவை கடந்த 2015ஆம் ஆண்டே ஒப்பந்ததாரருக்கு 14.37 கோடி ரூபாயை அரசு வழங்கியிருந்போதிலும், ஒப்பந்தபுள்ளியின் விதிகளை மீறி அலைக்கற்றை கட்டணமாக மேலும் 7.18 கோடி ரூபாய் அந்த ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் சிஏஜி புகார் தெரிவித்துள்ளது..


*காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் அதிமுக ஆட்சி காட்டிய அலட்சியதால் காவல்துறைக்கு மொத்தம் 14.37 கோடி ரூபாய் வீண் செலவு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


* காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாததால் இந்த திட்டத்திற்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதியில் 74.03 கோடி பயன்படுத்தாமலேயே அதிமுக ஆட்சியில் விடப்பட்டுள்ளது.


நிதி மேலாண்மையில் அதிமுக அரசின் மோசமான செயல்பாடு


* அதிமுக ஆட்சியில் நிர்வாக செயல்திறன் இல்லாததால் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 62 ஆயிரம் கோடி அளவிற்கு உயர்ந்தது. அதனை ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளிலேயே 30 ஆயிரம் கோடியாக குறைத்தது. திராவிட மாடல் திமுக அரசு.


* நிதி நிர்வாகத்தில் அதிமுக அரசின் மோசமான செயல்பாட்டிற்கு உதாரணமாக பல்வேறு விஷயங்கள் சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தை அதிமுக அரசு தவறாக கையாண்டது.


*தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்திடமிருந்து அதிமுக ஆட்சியில் உரியமுறையில் மின்சார வரி வசூலிக்கப்படவில்லை.


* அதிமுக ஆட்சியில் 2018ஆம் ஆண்டிலிருந்து பெறப்பட்ட மின்சார வரியில் 70 சதவீதம் அரசுக் கணக்கில் செலுத்தப்படாமல், தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்திடமே விடப்பட்டிருந்ததாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. இது மின்சார வரியை தவறாக பயன்படுத்த வழிவகுக்கும் அபாயகரமான நடவடிக்கை எனவும் அந்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது.


இலவச லேப்டாப் திட்டம் - 68.51 கோடி ரூபாய் இழப்பு


2017-21 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த இலவச லேப்டாப், காலணிகள். பள்ளி புத்தகப் பைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் அலட்சியம் இருந்ததை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளன.


* ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இந்த பொருட்கள் வழங்குவதில் தாமதமானதால் வீண் செலவுகள், தேவையற்ற நிதி முடக்கத்தை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.


2017-18ம் ஆண்டில் பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்க 60,000 லேப்டாப்கள் வாங்கப்பட்டு, 8079 லேப்டாப்கள் மட்டுமே மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதாவது 80% மாணவர்களுக்கு மட்டுமே பள்ளியில் படிக்கும் போது மடிக்கணினி வழங்கப்பட்டது.


* கொள்முதல் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்படாமல் இருந்ததால் லேப்டாப்களில் அதன் பேட்டரி மற்றும் இதர உதிரி பாகங்களின் உத்தரவாதம் காலாவதி ஆகி அரசுக்கு T68.71 கோடி தேவையற்ற இழப்பு ஏற்பட்டுள்ளது.


2017-18ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 2.32 வட்சம் மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பாக இலவச லேப்டாப்களை பெறவில்லை.


*போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக வாங்கப்பட்ட இலவச லேப்டாப்கள் அதிமுக ஆட்சியில் மற்ற மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.


55,000 மடிக்கணினிகள் பல ஆண்டுகளாக விநியோகிக்கப்படாமல் உள்ளன. பேட்டரியின் உத்திரவாதம் ஏற்கனவே ஆகஸ்ட் 2020 இலும், சிஸ்டத்தின் வாரண்டி ஆகஸ்ட் 2022 இலும் காலாவதியாகி விட்டது, தற்போதைய அரசாங்கம் இலவச லேப்டாப்களை மாணவர்களுக்கு வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டது. ஆனால் சிஸ்டம் உத்தரவாத காலம் காலாவதியாகிவிட்டது,


காலணி வழங்கும் திட்டத்தில் 5.47 கோடி ரூபாய் வீண்


இலவச காலணிகள் திட்டம் 2019-20 வரை அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டது. அது நவம்பர் 2019 இல் 6-10 வகுப்புகளுக்கு என மாற்றப்பட்டது.


காலணி இருப்பை சரிபார்க்காமல் ஆர்டர்களைத் தொடர்ந்து அளித்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஸ்டாக் குவிந்து, 2016-17ஆம் ஆண்டில் இருப்பு 0.91 லட்சத்திலிருந்து 2019-20ஆம் ஆண்டில் 3.46 லட்சமாக உயர்ந்தது. 2019-20 ஆண்டுகளில் 5.47 கோடிரூபாய் மதிப்பிலான 3.46 லட்சம் காலணிகள் பயன்படுத்தப்படாமல் மீதம் இருந்தது. திட்டம் மாற்றியமைக்கப்பட்டதால் 5.47 கோடி ரூபாய் வீண் என சி.ஏ.ஜி.அறிக்கை கூறியுள்ளது.


பள்ளி புத்தகப் பைகள் கொள்முதலில் 7.28 கோடி ரூபாய் முடக்கம்


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிப் பைகளை இலவசமாக வழங்கப்படுகிறது.


* 4.88 லட்சம் பள்ளிப் பைகள் தேவைக்கு அதிகமாக வாங்கியதால் அரசு நிதி 7.28 கோடி ரூபாய் முடக்கம் என கணக்கு அறிக்கைத்துறை குழு தெரிவித்துள்ளது.


மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்ததாக கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.


2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை தனியார் மற்றும் அரசு உதவி பெறும். மேல் நிலைப் பள்ளிகளில் சேர்க்கை 3.87% உயர்ந்துள்ளது. ஆனால் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை 11.84% சரிந்துள்ளது.


* அதிமுக ஆட்சியில் தனியார் உயர் நிலைப்பள்ளி மாணவர் சேர்க்கை 0.60 % அதிகரித்துள்ளது. அதே நேரம் அரசு உயர்நிலைப்பள்ளி சேர்க்கை 14.76 % சரிந்துள்ளது, ஆசிரியர் எண்ணிக்கை, தேவையான உள்கட்டமைப்பு குறைபாடு அதிகம் இருந்ததால் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது என்று சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது, அதே நேரம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்கட்டமைப்புகள் போதிய வகுப்பறை வசதி செய்யப்பட்டு வருகின்றது.


* அதிமுக ஆட்சியில் பள்ளி செல்லாத குழந்தைகளை அடையாளம் காண்பதில் அதிகம் குறைபாடு இருந்தது. கல்வித்துறையை மிக அலட்சியமாக கையாண்டுள்ளார்கள் என சி.ஏ.ஜி அறிக்கை தெளிவாக தெரிவித்துள்ளது.


கோவிட் ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்கள் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்ட ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் மாணவர்கள் தக்கவைப்பு மிகக் மோசமாக குறைந்து உள்ளது.


பள்ளிக் கல்வித்துறை நிதியில் ரூ.1,627 கோடி செலவு செய்யப்படவில்லை


*2018-2019 ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் 1,627 கோடி ரூபாயை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டது சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியிருக்கிறது.


2016 ஆம் ஆண்டு பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட 'தமிழ்நாடு எக்ஸெல்ஸ்' திட்டமும் குறைந்த பலன் கொடுத்து தோல்வியுற்றதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதில்


செய்தியாளர்: சிஏஜி அறிக்கை குறித்து அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?


இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள நிதி இழப்பு, வீண் செலவு, மோசடி ஊழல் குறித்தெல்லாம் சரியாக தீர்வு காணப்படும்.


செய்தியாளர்: திமுகவினரின் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்டு இருக்கிறார்?


வழக்கமாக வேட்புமனு தாக்கலின் போது, இது போன்ற சொத்து பட்டியல் விவரம் தெரிவிக்கப்படும். அதனை எடுத்து பத்திரிக்கையில் தெரிவிப்பது பெரிய விஷயம். அல்ல யார் மீதெல்லாம் அவர் குற்றம் சாட்டியிருக்கிறாரோ அவர்கள் எல்லோரும் இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்கள்.


செய்தியாளர்: அமைச்சர் பிடிஆர் ஆடியோ என அண்ணாமலை வெளியிட்டுள்ளாரே?


பி டி ஆர் அந்த ஆடியோவில் உள்ள பதிவுகள் வெட்டி ஒட்டப்பட்டது என விளக்கம் அளித்திருக்கிறார். மேலதிக தகவல்களை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.


செய்தியாளர்: மெட்ரோ நிறுவனம் தொடர்பாக முதலமைச்சர் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளாரே?


மெட்ரோ நிறுவனம் பணம் கொடுத்ததாக சொன்ன கருத்தை அந்த நிறுவனத்தினர் மறுத்திருக்கிறார்கள். அதையும் பாருங்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறி வருகிறார்.


செய்தியாளர்: பட்டியலின மக்களுக்கான நீதியை திமுக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக குற்றம் சாட்டப்படுகிறதே?


பட்டியலின மக்களின் நலனுக்கான பணத்தை திமுக அரசு மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய வரலாறு கிடையாது.


செய்தியாளர்: ஜிஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெறுகிறதே?


அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள். ஜி ஸ்கொயர் நிறுவனம் மீதுஅண்ணாமலையால் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி அந்த நிறுவனம் விளக்கம் கொடுத்திருக்கிறது. அவை பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது.


செய்தியாளர்: தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன் வீட்டிலும் சோதனை நடந்திருக்கிறதே?


திமுக எம்.எல்.ஏவின் குடும்ப உறுப்பினர்கள் தொழில் செய்யக்கூடாது என்பது கிடையாது. அந்த அடிப்படையில் அவர் வீட்டில் சோதனை நடந்திருக்கிறது.அதை அவர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வார்கள்...