புதிதாகப் பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 30 நாட்களுக்கான ரிப்போர்ட் கார்டு அண்மையில் வெளியானது. கொரோனா பேரிடர் கையாளுதல் முதல் பலதுறைகளுக்கு டிஸ்டிங்க்ஷன் கொடுக்கப்பட்டுள்ளன. பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்த ஒருமாதகால ஆட்சி சிறப்பாகவே உள்ளதாக நற்சான்றிதழ் அளித்துள்ளன. 7 மே 2021ல் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஆட்சிப்பொறுப்பேற்ற நிலையில் அமைச்சரவை துறைவாரியாகப் பெயர் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அதில் அமைச்சர் கீதா ஜீவன் பொறுப்பிலான மகளிர்நலத்துறைக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் முதல்நாள் முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். இதன்படி தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் உள்ளடக்கிய மகளிர் அனைவரும் கட்டணமில்லாமலும் பயண அட்டை இல்லாமலும் பயணிக்கலாம். இத்துடன் கொரோனா பேரிடரில் காலத்தில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருவள்ளுர் மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பிரத்யேக கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 'தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த மேலும் 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். மாதம் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் இத்திட்டத்தால் அகவை முதிர்ந்த செவ்வியல் - கிராமியக் கலைஞர்கள் 6600 பேர் பயன்பெறுவர்' என்று குறிப்பிட்டிருந்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு திரையுலக வட்டாரத்தில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்து வருகின்றது. திரைப்பிரபலன்கள் பலரும் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Bigg Boss 15 | பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறாரா பூமிகா?
இதனைத்தொடர்ந்து பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன் வெளியிட்ட பதிவில் 'நாடக, கிராமிய கலைஞர்களின் வாழ்வில் கிடக்கும் சொல்லமுடியா வறுமைக்கு இது பெரும் ஆறுதல் சார்.. தொழில் வளர்ச்சி இல்லா துறையில் நலிந்து கிடக்கும் மக்களுக்கு நிவாரண திட்டம் வழங்கிடும் நீங்கள் நீடூழி வாழ்க.' என்று மனமுருகி கூறியுள்ளார். தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு பரவலாக பாராட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.