தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் வகையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியானது தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது.  இதில் கோ-வேக்சின், கோவிட் ஷீல்டு என 2 வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.


முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பின்னர்  45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள், 60 வயதிற்கும் மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதையடுத்து தற்போது  18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. 




திருவண்ணாமலை மாவட்டத்திலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியானது  திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாறு தலைமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக தடுப்பூசி செலுத்தும் பணி மருந்துகள் இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாமல் காணப்பட்ட நிலையில்,  புதியதாக  தமிழக அரசு பொறுப்பை ஏற்றவுடன் பல்வேறு விழிப்புணர்வுகளை  கிராமங்களில் மற்றும் நகரங்களில்  ஏற்படுத்தியதின் அடிப்படையில்,மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்ட தொடங்கினர். 


இந்த நிலையில் தடுப்பூசி மருந்து கையிருப்பு தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் தீர்ந்ததால் கடந்த இரண்டு நாட்களாக  தடுப்பூசி போடும் பணியானது தற்காலிகமாக  நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக 2 டோஸ் மருந்துகளும் தீர்ந்து விட்டதால் பொதுமக்கள் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றும் இடங்களுக்கு வருகை தரும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாமல்  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் 


 




 


இது குறித்து அதிகாரிகள் அலைபேசியில் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 80-ல் இருந்து 100 வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதாகவும்,  ஆரம்பத்தில் குறைந்த அளவிலான மக்களே வந்த தடுப்பூசி போட்டு கொண்ட நிலையில், தற்போது பொது மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டு கொள்கின்றனர் என்றும் 24 லட்சம் பேர் வசிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.




சமூக ஆர்வலர்கள் கார்த்திகேயன் தெரிவிக்கையில் தினந்தொரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் தண்டோரா மூலமாகவும் ஒளி பெருக்கி போன்றவற்றின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசியை பொதுமக்கள் தற்போது அதிகமாகவும் ஆர்வமாகவும் போட்டுக்கொண்டு வரும் இச்சூழலில், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழக மக்களை வஞ்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டும்  மக்கள் தற்பொழுது விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் நிலையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்