புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் மதுக்கடைகள் மூடியிருப்பதால், மதுப்பிரியர்கள் மது குடிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது. தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அளித்திருக்கிறது. அதன்படி 44 நாட்களாக திறக்கப்படாத மதுபான கடைகள் திறக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மதுபான பார்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை ஆணையர் சுதாகர் தலைமையில் மதுக்கடை உரிமையாளர்களுடன் மதுக்கடைகளை திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், மதுபான கடைகளில் மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மது வாங்க வருவோர் மற்றும் மதுக்கடை ஊழியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மது வாங்க வருபவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்வதுடன், அவர்களுக்கு கிருமி நாசினியும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபான கடைகளில் கூட்ட நெரிசலை தடுக்க வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் செயலி மூலமும், போன் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு மதுக்கடை உரிமையாளர்கள் டோர் டெலிவரி செய்வதற்கான பணிகளை துவங்கியுள்ளனர். கலால்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுபானக் கடைகள் இந்த முறையை கடைப்பிடிக்கலாம் என்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மது கிடைக்காமல் சானிடைசர் குடித்து ஒருவர் புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டார். இதனைக் கேட்டு மனமுடைந்த எம்எல்ஏ ஜான்குமார் மதுக்கடைகளைத் திறக்க ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் டெல்லி சுங்கவிதிகள் 2021ன்படி, எல்-13, எல்-14 உரிமம் வைத்துள்ள மதுக்கடை உரிமையாளர்கள் மட்டும் மொபைல் செயலி, இணையதளம் மூலம் பெறும் ஆர்டர்களை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று சப்ளை செய்யலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவின் பரவல் டெல்லியில் குறைந்ததை அடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்க அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக கட்டுமானப் பணியாளர்கள், தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் மதுபானங்களை வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்ட அறிவிப்பில், 'எல்-13 வகை உரிமம் வைத்திருக்கும் கடைக்காரர்கள் மட்டுமே மொபைல் செயலி அல்லது இணையதளம் வாயிலாக மதுபானங்களை ஆர்டர் பெற்றால் அவர்களின் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. பில் இல்லாமல் மது விற்பனை செய்யப்படும் தமிழகத்தில் டோர்டெலிவரிக்கு வாய்ப்பு குறைவு என்பதும், அண்டை மாநிலத்தில் கிடைத்துள்ள இந்த சலுகை தமிழ்நாட்டு குடிமகன்களுக்கு நிச்சயம் கடுப்பேத்தும் என்பதும் உண்மை.