அடுத்த 3 மணி நேரம்:


தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும் வரும் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24  மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்):


மீனம்பாக்கம் (சென்னை) 89.5, நுங்கம்பாக்கம் (சென்னை) 71.2, அரியலூர் 2.0, திருவள்ளூர் 116.5, கட்டப்பாக்கம் (காஞ்சிபுரம்) 77.0, விருத்தாசலம் (கடலூர்) 14.5, ராமநாடு 7.5, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) 115.0,ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 88.0, செம்பரம்பாக்கம்  (காஞ்சிபுரம்) 66.5, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 53.0, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 16.5, பல்லிக்கரணை (சென்னை) 12.0 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.  


இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அம்பத்தூர், போரூர், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு, புறநகர்ப் பகுதிகளான அம்பத்துார், பாடி, கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.



இன்று காலை முதல்  வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்றைய மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுதியுள்ளது. நேற்று இரவு பெய்த மழையை போலவே இன்று இரவும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தற்போது மேகக்கூட்டங்கள் கடலுக்குள் நுழைந்த காரணத்தால் பகல் நேரங்களில் மழை பெய்யாது என தெரிவித்துள்ளார்.