சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் என்பவர் நீட் தேர்வில் தொடர்ந்து தேர்ச்சி பெற்றாலும்,  எதிர்பார்த்த அளவிலான மதிப்பெண்கள் கிடைக்காததால், அவரது மருத்துவர் கனவை எட்டமுடியாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அவரது குடும்பம் மற்றும் சக மாணவர்களும் நண்பர்களும் வேதனை அடைந்துள்ளனர். நீட் தேர்வினால் மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளாதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மாணவர் ஜெகதீஸ்வரன்:


சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த நிலையில்,  இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். 19 வயதான அவர் மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் கடந்த 2 வருடங்களாக நீட் தேர்வு எழுதினார். தொடர்ந்து 2 முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அரசுக்கல்லூரியில் இடம் பெறுவதற்கு தேவையான மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இதனால்,  மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்குவேன் என்ற நம்பிக்கையோடு இருந்த அவர், நீட் பயிற்சி மையத்துக்கு ஆன்லைனில் பணமும் கட்டினார்.


தற்கொலை:


இதனிடையே, நீட் பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் 450 மதிப்பெண்கள் பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்காததால் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பை தொடர்ந்துள்ளனர். 2 பேர் தனியார் கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டு சீட் பெற்று எம்.பி.பி.எஸ். படிப்பை தொடர்ந்துள்ளனர். இதனால் நண்பர்கள் யாரும் தன்னுடன் மீண்டும் நீட் தேர்வு எழுதவில்லை என்பதால் ஜெகதீஸ்வரன் மனக்குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விரக்தி அடைந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான தகவலறிந்த சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு காரணமாக, மருத்துவ கனவு வீணாகி போனதால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருவது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் தொடர்பு எண்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)