சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது.


வெளுத்து வாங்கும் மழை:


சென்னை சென்டிரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், , அம்பத்தூர், போரூர், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு,  புறநகர்ப் பகுதிகளான அம்பத்துார், பாடி, கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது. 






மகிழ்ச்சியும் - அவதியும்:


3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழை பெய்து வருவதால், பகல் நேரங்களில் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக வாட்டி வதைத்து வரும் வெய்லின் தாக்கம் குறைந்துள்ளது. சில்லென்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம், பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், காலையில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கோள்பவர்கள் உள்ளிட்டோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


பிற மாவட்டங்களில் மழை:


சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மற்ற வடமாவட்டங்களிலும் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், மழைக்கு ஏற்றபடி பொதுமக்கள் தங்களது பயண திட்டங்களை அமைத்துக் கொள்வது நல்லது.


பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்:


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஆனால், பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், கல்வி நிலையங்கள் வழக்கம்போல் இயங்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்,  சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் வழக்கம் போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.