வெயிலைப் பார்த்து எல்லோரும் ஒதுங்கிச் செல்லும் வேளையில், தங்களின் வேலைக்காக வெயிலோடு உறவாடிக் கொண்டிருக்கிறார்கள் உணவு டெலிவரி சேவகர்கள். 


கோடைகால வெயில் மக்களை வாட்டி வதக்கத் தொடங்கிவிட்டது. வெயில் அதிகரித்ததில் இருந்து வெளியே போவதற்கே மக்கள் தயங்கி வருகின்றனர். அலுவலகம் செல்பவர்களும், இரு சக்கர வாகனங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்துகின்றனர். வெயிலில் போகாமல் இருப்பதற்கான மாற்று வழிகளை மக்கள் தேர்வு செய்து வருகின்றனர். ஆனால் இதே வெயிலில், நிற்க நேரமின்றி அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் டெலிவரி சேவகர்கள். விறுவிறுப்பாக ஓடும் சூழலில் சமைப்பதற்கு மட்டுமல்ல ஓட்டலில் போய் சாப்பிட வேண்டும் அல்லது ஓட்டலுக்கு சென்று சாப்பாடு வாங்கி வரவேண்டும் என்பதற்கே நேரமின்றி இருந்த மக்கள், உணவை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும் டெலிவரிக்கான ஒரு ஆப்ஷன் வந்த பிறகு வீட்டில் வேலையே இல்லையென்றாலும், கையில் ஃபோனும் உணவு அப்களும் இருந்தால் போதும் என ஆர்டர் போட்டு சாப்பிட்டு வருகிறார்கள்.




டெலிவரி செய்பவர் வீட்டிற்கு அருகில் வந்த பிறகு அவர் ஃபோன் செய்தாலும் உடனே எடுக்காமல் அவர்களை காக்க வைப்பது அல்லது எதாவது வேலையில் இருந்தால் அதனை முடித்து விட்டு பொறுமையாக டெலிவரி வந்திருக்கும் உணவை வாங்கப் போவது என்பதை பலர் வழக்கமாக வைத்திருப்பதே டெலிவரி செய்ய வருபவர்களின் மன வருத்தமாக உள்ளது.


மதுரையைச் சேர்ந்த டெலிவரி நிறுவன நண்பர் ஒருவரிடம் பேசிய போது, "இந்த பணியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் நன்கு படித்து பட்டம் பெற்றவர்கள். கொரோனா லாக்டவுன் நேரத்துல வேற வேலை இல்லை என்பதால, அதான் அப்படியே இங்கே வேலைக்கு சேர்ந்திருக்காங்க. காலை 8 மணிக்கு அப்ல லாக் இன் பண்ணனும். ஆனா 9 மணிக்கு மேல தான் ஆர்டரே வரும். சரி ஆர்டர் வந்துருச்சுன்னு ஓட்டலுக்கு போய் சாப்பாட்டை வாங்கிக்கிட்டு டெலிவரி பண்ண போனால் கஸ்டமர் ஃபோனை எடுத்து ஒழுங்கா பதில் சொல்ல மாட்டாங்க. லொக்கேஷன் கரெக்டா இல்லைனாலும் எங்களிடம் தான் கஸ்டமர் கோவமா பேசுவாங்க. ஒரு சிலர் எல்லாம் லொக்கேஷனுக்கு போய் போன் பண்ணும் போது அரை மணி நேரம் எடுக்காம எல்லாம் இருந்திருக்கங்க. அதனால அடுத்த வர்ற ஆர்டருக்கும் போக முடியாது. எங்களை மனுஷனா மதிச்சாலே போதும். அவங்க ஆர்டர் போட்டா அதைக் கொண்டு வர்றது எங்க வேலை, எல்லாரும் இல்லை இன்னமும் ஒரு சில பேர் நாங்க ஏதோ செய்யக்கூடாத வேலையைச் செய்ற மாதிரி தான் பாக்குறாங்க. இது மாறினால் நல்லா இருக்கும்." என்றார்.



இரவானாலும், பகலானாலும் பைக்கை விரட்டிக்கொண்டு வந்து சாப்பாட்டை டெலிவரி செய்கிறார்கள். இந்த கோடை வந்தால் இவர்களின் நிலை இன்னும் மோசம். கோடையில் வெயிலில் போவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்தம் அதே வேளையில், வேலைக்காக இவர்கள் வெயிலில் தான் ஓடுகிறார்கள்.இந்த வேலையில் இருப்பவர்களுக்கு விபத்து நடக்க அதிக வாய்ப்புண்டு. கொஞ்சம் லேட் ஆனாலும் கஸ்டமர் ரேட்டிங் போட மாட்டாங்க என்பதால் டெலிவரி பண்றவங்க வண்டியை வேகமா ஓட்டிட்டுப்போவாங்க. டார்கெட்ட முடிச்சா தான் ஓர் அளவுக்கு வருமானம் வரும். அதிலயும் இப்போ பெட்ரோல் விலை வேற கூடிட்டே போகுது. பாதி காசு வண்டி சர்வீஸூக்கே செலவாகிடும். இப்போ எல்லாம் தண்ணீர் குடிக்க கூட நேரமில்லாம ஓடிட்டு இருக்கோம்.” என்றார் வருத்தமாக.


மத்த நேரத்தில தொடர்ந்து வண்டி ஓட்டுறதுனால உடம்புக்கு நெறைய பிரச்சினை வரும். இது வெயில் நேரம் சொல்லவா வேணும். உடம்புல தண்ணீயே இல்லாதது போல நாக்கு அடிக்கடி வறண்டு போயிரும். சூடு அதிகமா இருக்கும், வயிற்று வலி வரும் இப்படி நெறையா உடல் பிரச்சினை வரும். கஸ்டமர்ஸ் கொஞ்சம் எங்கள புரிஞ்சிகிட்டு நடந்தா நல்லா இருக்கும். தண்ணீர் கொடுக்க வேண்டாம். தண்ணீர் குடிக்கிறீங்களானு கேட்டாலே போதும்” என்றார்




ஒரு ஆர்டரை டெலிவரி செய்தவுடன் அடுத்த ஆர்டர் வந்துவிடும். சரியான நேரத்துக்கு சாப்பிட முடியாது. மற்ற வேலையில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தினாலும் இவர்களின் நிலைமை இன்னும் மோசம். தண்ணீர் கூட குடிக்க நேரம் இல்லாமல் தான் இவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சாப்பிடப் போகும் வாடிக்கையாளர்களிடமே சாதாரண தண்ணீர் வைப்பதற்கு முன் தண்ணீர் பாட்டில்கள் தரலாமா என்று கேட்கும் ஓட்டல்களில், டெலிவரி சேவகர்களுக்கு என தனியாக தண்ணீர் வைக்க வாய்ப்பு குறைவுதான்.


உணவு டெலிவரி செய்ய வருபவர்களிடம் சிறு புன்னகையோடு நன்றி சொல்லலாம். உணவை வாங்கும் போதே ஒரு பாட்டிலில் தண்ணீர் குடிக்கக் கொடுக்கலாம். முடிந்தால் ஒரு நல்ல பாட்டிலிலோ அல்லது அவர்கள் வைத்திருக்கும் பாட்டிலிலோ தண்ணீர் நிரப்பிக் கொடுக்கலாம். இந்த சிறிய முயற்சியால், அவர்களின் உடல்நலம் பாதிக்காமல் இருக்கலாம்.