கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை வாட்டி வதைத்துவரும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்க பத்திரிகையாளர்களை இன்று சென்னையில் சந்தித்தார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். மத்திய அரசின் செஸ் சர்சார்ஜ் போன்ற கூடுதல் வரி வசூலிப்பால்தான் மாநில அரசால் பெட்ரோல் டீசலின் மீதான வாட் வரியைக் குறைக்கமுடியவில்லை என்றும் மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் 100-இல் 4 பங்குதான் தமிழ்நாடு அரசுக்கு நிதியாகக் கிடைக்கிறது என்றும் விலை உயர்வுக்கான பல்வேறு காரணங்களை விளக்கிப் பேசினார்.
அப்போது செய்தியாளர்களில் பெண் பத்திரிகையாளர் ஒருவர், ”பெட்ரோல் டீசல் மீதான விலையை ஐந்து ரூபாய் வரைக் குறைப்போம் என்று திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது, அதை எப்போது செய்யப்போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு இடைமறித்து வேறொரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த நிதி அமைச்சர், ‘அவங்கதான் கேள்வி கேட்கிறாங்களே? ஏன் இடைமறிக்கறீங்க. அவங்களுக்கு அறிவு பத்தலைனு நீங்க கேட்கறிங்களா? பெண்களுக்கு முன்னுரிமை இல்லையா? ’ என இடைமறித்த பத்திரிகையாளரைப் பார்த்துக் காரசாரமாகப் பேசினார். இதனால் பத்திரிகையாளர் சந்திப்பு சிலநிமிடங்கள் சலசலப்புடன் காணப்பட்டது. மேலும் அந்தப் பெண் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘ஐந்தாண்டுகள் ஆட்சி செய்யப்போகிறோம், விரைந்து எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். சென்ற அரசாங்கத்தின் நான்கரை கோடி ரூபாய் கடன் என்பது பொய் அதனையும் கடந்து கடன் இருக்கிறது. வருடத்துக்கு வட்டி மட்டுமே ஐம்பதாயிரம் ரூபாய் செலுத்திக்கொண்டிருக்கிறோம். நமது நிதிநிலை படுமோசமாக இருக்கிறது. விரைவில் அதுகுறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறோம்.அதன்பிறகுதான் முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு அரசு ஏன் பெட்ரோல் டீசல் வரி மற்றும் டாஸ்மாக் நிதியை மட்டுமே நம்பியிருக்கிறது என மற்றொரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அவர், ‘டாஸ்மாக்கை வைத்து அரசாங்கம் நடத்துகிறோம் என்பது தவறான கருத்து. அதன் மொத்த வருமானம் அதிகபட்சம் 37000 கோடி ரூபாய்தான்.மாநிலத்தின் உற்பத்தியில் வருமானம் மட்டும் கருணாநிதி ஆட்சியில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருந்தது. அது தற்போது பாதியாகக் குறைந்துவிட்டது. வருமானத்தில் 70000 கோடி வரை இழந்திருக்கிறோம். இன்றைக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி வரியிலும் கூட நமக்கு ஐம்பது சதவிகிதம்தான் வருகிறது.
கொரோனா பேரிடர்கால வேலையில் ஈடுபட்டுள்ளதால் இன்னும் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை கூட நிகழ்த்தப்படவில்லை. இதற்கிடையேதான் ஜி.எஸ்.டி. வாட் என அத்தனை வரிகளில் இருக்கும் குளறுபடிகளையும் நமது நிதிநிலை குறித்தும் கண்டறிந்துள்ளோம். நிதிநிலை அறிக்கையும் பல வெள்ளை அறிக்கைகளும் விரைவில் வெளிவரவிருக்கிறது. அதன் பிறகு மக்கள் முடிவு செய்வார்கள்’ எனக் குறிப்பிட்டார்.
Also Read: எந்தெந்த மாவட்டத்தினர் திருமணத்திற்கு இ-பாஸ் பெறலாம்? எப்படி பெறலாம்?