தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டது. அவற்றில் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், அந்த கட்சியின் சட்டசபை தலைவராக நீண்ட  நாட்களுக்கு பிறகு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். அவருடன் கட்சியின் சட்டப்பேரவைத் துணைத்தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கட்சியின் பிற பொறுப்புகளுக்கான நபர்கள் நியமிக்கப்படாமலே இருந்தனர். இந்த நிலையில், தமிழக சட்டசபைக்கான காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகளை அந்த கட்சியின் தலைமை நியமித்துள்ளது.


இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், அவர் “தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் – கு.செல்வப்பெருந்தகை, துணைத்தலைவர் –எஸ்.ராஜேஷ்குமார், சட்டசபை காங்கிரஸ் கொறடா- எஸ்.விஜயதாரணி, துணை கொறடா – ஜெ.எம்.ஹசன் மவுலானா, செயலாளர் – ஆர்.எம். கருமாணிக்கம். பொருளாளர் – ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்”


கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. வாக தேர்வாகியுள்ள விஜயதாரணி தற்போது சட்டமன்ற காங்கிரஸ் கொறடாவாக நியமிக்கப்பட்டு இருப்பதற்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


51 வயதான விஜயதாரணி சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர். இவர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் எதிர்பார்ப்புகள் நிலவியது. ஆனால், அந்த பொறுப்பு செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சட்டசபை காங்கிரஸ் கொறடாவாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜயதாரணி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : சென்னைக்குள் இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம் : தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன?