ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தொடர்ந்து சொல்லுவோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசை, ஒன்றிய அரசு என ஏன் தமிழ்நாடு அரசு சொல்கிறது என கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலேயே ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவதாகவும் கூறினார். ஒன்றிய அரசு என்ற சொல்லை தொடர்ந்து சொல்வோம் என்ற முதல்வர், ஒன்றிய அரசு என்ற சொல் தவறான சொல் அல்ல என்ற அவர், ஒன்றியம், ஒன்றிய அரசு என்ற சொல்லாடலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து பயன்படுத்தும் என்றார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியிலேயே INDIA SHALL BE A UNION OF STEATE - இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த சொல்லை கேட்டு யாரும் மிரள வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். அண்ணா, கருணாநிதி மத்திய அரசு என்ற சொல்லைத்தான் பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் கருத்துக்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின் திமுகவின் முதல் தேர்தல் அறிக்கையான 1957-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலேயே ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
1963-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பேரறிஞர் அண்ணா, அரசின் உடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இன்றி இறையாண்மை ஆனது பொதுமக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறையான்மை ஆனது கூட்டாட்சி ஒன்றியத்திற்கும் அதன் அங்கங்களுக்கும் இடையே பிரித்து தரப்பட்டுள்ளது என்று பேசி உள்ளார். சமஷ்டி என்ற வார்த்தையை மரியாதைக்குரிய மாபொசி பேசி இருப்பதாகவும், வெளியேறுக மிகுதியான அதிகாரக்குவிப்பு, வருக உண்மையான கூட்டாட்சி என மூதறிஞர் ராஜாஜி எழுதி உள்ளதையும் குறிப்பிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி உள்ளதால் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினோம், பயன்படுத்தி வருகிறோம் இனியும் பயன்படுத்துவோம் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், இந்தியாவில் இருந்து பிரிந்ததுதான் மாநிலங்கள் என கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிரியவில்லை, எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் இந்தியா என்று விளக்கம் அளித்தார்
நயினார் நாகேந்திரனின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு எனவும், நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க பாஜக தயாரா? எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.