சென்னை கோவலம் மீனவ கிராம மீனவர்கள் பி.ஸ்ரீனி, எம்.பிரபுவுக்கு அன்றைய தினம் எப்போதும் போல் சாதாரண நாளாக அமையவில்லை. மீன்பிடிப்பதற்காகச் சென்று 5 கி.மீ தூரம் வரை வலையைப் பரப்பிவிட்டு காத்திருந்த அவர்களுக்கு ஓர் அபயக் குரல் கேட்டுள்ளது. அந்தக் குரலைக் கேட்டு அங்கே சென்று பார்த்தவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
பின்னர் நடந்தததை ஸ்ரீனியும் பிரபுவுமே விவரித்தனர். அவர்கள் கூறியதாவது:
நாங்கள், எங்களின் வாழ்நாளில் அவ்வளவு பெரிய ஆமையைப் பார்த்ததில்லை. அதன் தலை மட்டுமே எனது தலையைப் போல் இருமடங்கு பெரியதாக இருந்தது. முதலில் எங்களுக்கு அதனருகில் நெருங்கவே பயமாக இருந்தது. பின்னர், அது மீன்பிடி வலையில் சிக்கியிருப்பதைப் பார்த்துப் பரிதாபமாக இருந்தது. உடனே அதனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தோம். உடனே அதனை முதலில் மெதுவாகத் தொட்டுப் பார்த்தோம். அந்த ஆமை ஒத்துழைப்பதுபோல் அமைதியாக இருந்தது. உடனே நாங்கள் இருவரும் அதன் மீது சுற்றியிருந்த வலையைப் பிரிக்க முயன்றோம். சுமார் 2 மணி நேரம் ஆனது முழுமையாக ஆமையின் உடலில் இருந்து அந்த வலையைப் பிரித்தெடுக்க. ஆனால், அவ்வளவு நேரமும் அந்த ஆமை மிகவும் பொறுமையாக இருந்தது. அதற்கு நாங்கள் எப்படியும் அதனைக் காப்பாறிவிடுவோம் என்ற நம்பிக்கை வந்திருந்தது போல் எங்களுக்குத் தோன்றியது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அதன் உடலைச் சுற்றியிருந்த அந்த ராட்சத வலையைப் பிரித்து ஆமையை விடுவித்தோம். இது வாழ்நாள் அனுபவம் என்று தங்களின் புதிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
சுமார் 10 கிலோ எடையிலிருந்த அந்த வலையைக் கொண்டுவந்து எச்சிஎல் உதவியுடன் இயங்கும் ட்ரீ ஃப்வ் ஃபவுண்டேஷனிடம் ஒப்படைத்துள்ளது.
இது குறித்து கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் ட்ரீ ஃப்வ் ஃபவுண்டேஷனின் சுப்ரஜா கூறுகையில், "கடந்த ஜூலை மாதம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 14,000 கிலோ கிழிந்த வலைகளை எங்களிடம் மீட்டுக் கொடுத்தனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிலோவுக்கு ரூ.5 என்று வழங்கினோம்" என்றார்.
மேலும், அவர் கூறுகையில், "மீனவர்கள் காப்பாற்றிய அந்த ஆமையைப் பற்றியும் விவரித்தார். மீனவர்கள் குறிப்பிடும் இந்த வகை ஆமைகள் லெதர்பேக் டர்ட்டிள் வகையைச் சேர்ந்தவை. இவை மிகவும் அரிதானவை. பெரும்பாலும் அந்தமான் நிகோபார் பகுதிகளில் வாழும் இவை, இனப்பெருக்கக் காலத்தில் இடம் பெயர்ந்து வருவதுண்டும். தற்போது மீனவர்கள் விடுவித்துள்ள அந்த ஆமை முழுமையாக வளர்ந்த ஆண் ஆமை. சென்னை, காஞ்சிபுரம் கடற்பகுதிகளில் சுமார் 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் பெரிய அளவிலான ஆமைகள் ஒன்றிரண்டைப் பார்த்ததாக எப்போதாவது மீனவர்கள் சொல்வதுண்டு. ஒருமுறை நீலாங்கரை கடற்கரையில் இதேபோன்ற ராட்சத வலையில் சிக்கிய ஆமை ஒன்று மீட்கப்பட்டது.
ஆனால், இப்போது மீனவர்கள் குறிப்பிட்டுள்ள லெதர்பேக் ஆமையை கடைசியாக 1982 மார்ச் 28ல் கோவலம் பகுதியில் தான் மீனவர்கள் பார்த்தனர். ஆனால், அந்தப் பெண் ஆமை இறங்கி கதை ஒதுங்கியது" என்றார்.