விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுகுறித்து பேசிய அவர், ”விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்தபோது வெளிமாநிலங்களில் உணவுப் பொருட்கள் வாங்கி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


இப்படியான சூழ்நிலையில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது”என கேள்வி எழுப்பியுள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், ”பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு தமிழகத்தின் பிரச்சினை குறித்து பேசவில்லை. நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் தமிழக உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை. எப்போது பார்த்தாலும் நான் பாஜகவுக்கு அடிமை என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஒருபோது நான் எவருக்கு அடிமையாகமாட்டேன். 


பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும் காவிரி பிரச்சினைக்காக 24 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக முடக்கியது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி முதலமைச்சர் மக்களை ஏமாற்றுகிறார்." என தெரிவித்தார்.