தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இணையதளத்தை தொடங்கி வைத்தார். எளிதாக நிவாரண நிதியை செலுத்துவதுடன் செலவு குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.


இந்த இணையதளம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மே 6ஆம் தேதிக்கு முன் வந்த நிதியை தனிக் கணக்காகவும், மே 7ஆம் தேதிக்கு பின் அந்த நிதியை தனிக் கணக்காகவும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிஎம்-கேர்ஸ் நிதியில் எந்த வெளிப்படைத்தன்மையும் கிடையாது. முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு இரண்டு மாதங்களில் சுமார் ரூ.472.62 கோடி வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 14 மாதங்களில் பொது நிவாரண நிதிக்கு ரூ.400 கோடிதான் வந்துள்ளது. இதுவரை 241 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டும்” என்று கூறினார்.






கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு கடந்த மே 11-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 10 லட்சம் ரூபாய் மேல் வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும், ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் வழியாக நிதியை செலுத்தலாம் என்றும் கூறினார். மேலும், நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறினார். இதனைத் தொடர்ந்து பலரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.


கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், கொரோனா 2-வது அலையால் தொற்று பரவல் குறையாமல் மார்ச், மே மாதங்களில் அதிகமாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், தொற்று குறைந்து வருவதால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.