திமுக ஆட்சிக்கு வர வேண்டும், செந்தில் பாலாஜி வெற்றி பெற்று அமைச்சராக வேண்டும் அவ்வாறு நடந்து விட்டால் தனது உயிரை தியாகம் செய்வதாக வேண்டிக்கொண்ட திமுக தொண்டர் ஒருவர் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




கரூர் மாவட்டம், லாலாப்பேட்டையை சேர்ந்த உலகநாதன் (60). இவர் போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் இன்று கரூர் அடுத்த மண்மங்கலம் காளியம்மன் கோவிலுக்கு சென்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, கோவில் உட்புறத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். 





இவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். கரூரில், செந்தில் பாலாஜி வெற்றி பெற்று அமைச்சராக வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்று விட்டால் உயிர் தியாகம் செய்வதாக காளியம்மன் கோவில் வேண்டிக்கொண்டதாகவும். அதன்படி வெற்றி பெற்று விட்டனர். எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் குல தெய்வ கோவிலான மண்மங்கலம் புதுக் காளியம்மன் கோவிலில் அமாவாசை நாளான இன்று தனது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கோவிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொள்வதாக எழுதி வைத்துள்ளார். 




கொரோனா ஊரடங்கால் தேர்தல் வெற்றி பெற்றதும் இந்த வேண்டுதலை செய்ய முடியவில்லை. அதனால் தான் இன்று வேண்டுதலை நிறைவேற்றுவதாக எழுதி வைத்துள்ளார். இக்கடிதத்தை கைப்பற்றிய வாங்கல் போலீசார் உயிரிழந்த உலகநாதன் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்த உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற செய்தியாளர்களிடம் கோவில் நிர்வாகத்தினர் மிகுந்த அராஜக போக்கை கடைப்பிடித்தனர். கோயிலுக்குள் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட செய்தி படம் பிடிக்கச்சென்ற செய்தியாளர்களிடம் ஆலய நிர்வாகத்தினர், உள்ளே யாருக்கும் அனுமதி இல்லை உள்ளே வந்தால் கேமராவை பிடுங்கி விடுவோம் என்ற ஏக வசனத்தில் பேசினர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் தங்களது பணியை ஆலயத்தின் வெளியில் இருந்தவாறே செய்தி சேகரிப்பில் ஈடுபட்டனர். 




கரூர் அருகே போக்குவரத்து ஊழியர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்குடும்பத்தில் கடுமையான மன உளைச்சலில் இருக்கின்றனர்.