தான் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு ஏற்றபடி நடக்காமல் பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் அவமானகரமாக நடந்து கொண்டதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கட்டமைப்பு பணிகளுக்கான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார்.
மேடையில் கோரிக்கைகளை முன்வைத்த முதலமைச்சர்...
இவ்விழாவில், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பிரதமர் மோடியை வரவேற்றுப் பேசினார். இவ்விழாவில் முதன்முறையாக பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்ற நிலையில், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, கச்சத் தீவு மீட்பு, நீட் விலக்கு மசோதா, அலுவல் மொழியாக தமிழ் அங்கீகரிப்பு ஆகியவை குறித்த கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மத்திய இணை அமைச்சர் எல் முருகனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்.முருகன் கண்டனம்...
இது குறித்த தனது ட்வீட்டில், “பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். வளமான நமது தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி ஆகியவற்றைப் பற்றி பெருமையுடன் பேசினார்.
ஆனால், அவரிடம் தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமற்று ஸ்டாலின் நடந்துகொண்டது அவமானகரமாக இருந்தது.
வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா, திமுக பேரணியாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாறிவிட்டது. தனது மோசமான ஆட்சிமுறையை மறைக்கவே ஸ்டாலின் முயற்சிக்கிறார். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஸ்டாலினின் செயல்பாடுகள் பற்றித் தெரியும்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்