டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி தேர்வு, காவலர் தேர்வு என்று அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ்த்தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விலக்களித்து, ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
’’அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்கள் பெருமளவில் நியமனம் பெற ஏதுவாக, மாநிலத்தின் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தகுதித்தாள் கட்டாயமாக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன. அவ்வரசாணைக்கிணங்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளினை கட்டாயத்தாளாக இணைத்து, அதற்கேற்ப அறிவிக்கைகளை வெளியிட்டு, தெரிவு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது.
செவித்திறன் குறைபாடு உள்ளவர்களின் பெற்றோர் சங்கத்தின் மனுவில், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்க சிரமப்படுவார்கள் என்றும், இம்மாணவ மாணவியர்கள் சிலர் முன்பருவப் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை முழுமையாக ஆங்கில வழிக் கல்வியில் மட்டுமே கல்வி கற்றிருப்பார்கள் எனத் தெரிவித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற குரூப் 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வில் இத்தேர்வர்களுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து, அவர்களுக்கென தனியாக பொது ஆங்கிலத் தாளினை நடத்தக் கோரியுள்ளனர்.
மேற்காணும் கோரிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித் தேர்வினை எழுதுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களித்து அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது:
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், நடத்தப்படும் குரூப் I,II, II-A ஆகிய இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில், முதன்மை எழுத்துத்தேர்வில் கட்டாய தமிழ்மொழித்தாளானது, தகுதி தேர்வாக நடத்தப்படுகிறது. இதுபோன்ற தேர்வுகளில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித் தாளினை எழுதுவதிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது.
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், நடத்தப்படும் III, IV, VII-B, VIII போன்ற ஒரே நிலை கொண்ட தேர்வுகளில் தமிழ் மொழித்தாளானது, தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளில், பள்ளி/ கல்லூரிகளில் ஆங்கில மொழிப் பாடம் மட்டுமே படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழ் மொழித்தாள் எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அதற்கு பதில் தரவரிசை மதிப்பீடு செய்வதற்காக, அவர்களுக்கென்று தனியாக பொது ஆங்கிலத்தேர்வு நடத்தப்படும். (இத்தேர்வுகளில் மொழி பெயர்ப்புப்பகுதி இடம் பெறாது).
- கட்டாய தமிழ் மொழித் தாளிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான விலக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாமல், மாநிலத்தின் மற்ற தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் நியமன அலுவலர்களால் தேவைப்படும் நேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும்.
- இவ்விலக்கு 40 சதவிதத்திற்கும் குறைவான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும்.
- இவ்விலக்கினைப் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழைச் சமர்ப்பித்தல் வேண்டும்’’.
இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.