முன்னாள் ரவுடி, முன்னாள் தேடப்படுவர் என்றெல்லாம் பல்வேறு புனைப்பெயர்கள் இருந்தாலும், அதை கடந்து நடமாடும் நகைக்கடையாக சமீபத்தில் அறியப்படுகிறர் வரிச்சியூர் செல்வம். மதுரை மாவட்டம் வரிச்சூர் கிராமத்தை சேர்ந்த செல்வத்தின் துவக்க காலம், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து என்று இருந்தது. பிந்நாளில் அவர் மீது நிறைய வழக்குகள் வர, அதை எதிர் கொள்வதில் அவருக்கான காலம் ஓடியது. ஒரு கட்டத்தில் எல்லாம் போதும் என ஒதுங்கி நிற்கும் வரிச்சூர் செல்வம், இன்றும் ரவுடியாகவே அறியப்படுகிறார். ஆனால், அதை விரும்பாத அவர், கோயில் விழாக்களுக்கு செல்வது, உறவினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கு செல்வது என ஒரே குஷி மோடில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 


எப்போதுமே கழுத்தில் கிழே கணக்கில் நகைளை அணிந்திருப்பது, அவரது அடையாளமாகிவிட்டது. கையில் பிரேஸ்லெட், மோதிரங்கள் என உடலில் எங்கெல்லாம் நகை அணிய முடியுமோ... அங்கெல்லாம் அள்ளி அள்ளி நகைகளை அணிந்து கொள்வதை தனது விருப்பமாக தொடர்ந்து வருகிறது. நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் வரிச்சூர் செல்வம், சீசனுக்கு ஏற்ப தன் உடலில் நகையை அதிகரித்துக் கொண்டே இருப்பார். கொரோனா காலத்தில் 10 பவுன் எடை கொண்ட தங்க முககவசத்தை அணிந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தவர். 




கொரோனா காலத்தில் அவனவன் வேலை இல்லாமல், சோற்றுக்கே திண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், 10 பவுனில் முகக்கவசம் அணிந்து கொண்டு வந்தது, பலரின் கண்ணை உறுத்தியது. அது தொடர்பாக நாம், அப்போது அவரிடம் கருத்து கேட்ட போது, ‛நகை அணிவது எனக்கு விருப்பம்... என் விருப்பத்திற்காக நகை அணிகிறேன். உடல் முழுக்க நகை அணிந்திருக்கும் போது, முகத்தில் மட்டும் துணியால் ஆன மாஸ்க் அணிந்திருந்தால் அது எடுக்காது; அதனால் தான், சிறிதாக 10 பவுனில் தங்க முக கவசம் செய்தேன்’ என்று கூறியிருந்தார். 


அவர் ஏற்கனவே அணிந்திருக்கும் அணிகலன்களை பார்த்து, பலருக்கு இன்னும் காண்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய தங்க செயினை வாங்கியுள்ளார் வரிச்சூர் செல்வம். மாடுகள் அணியும் சங்கிலியை விட அதிக அளவில் கனமாக இருக்கும் அந்த நகை, பவுனில் இருக்காது, கிலோ கணக்கில் தான் இருக்கும். நகைக்கடையில் அந்த நகையை ஆர்டர் செய்து வாங்கிய வரிச்சூர் செல்வம், அதை அங்கேயே அணிந்து மகிழ்ந்தார். 




இந்தியாவின் மிகப்பெரிய தங்க செயினை அணிந்து வரிச்சூர் செல்வத்துடன், நகைக்கடை ஊழியர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்தியாவின் அதிகபட்ச நகையை அணிந்தவர் என்கிற பெருமிதத்தோடு, அந்த நகையை வாங்கி வழக்கமான நடைமாடும் நகைக்கடையாக நடந்து சென்றார் வரிச்சூர் செல்வம்!