பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கூடுதல் தகவல்கள் பல வெளியாகியிருக்கிறது. குறிப்பாக நடிகர் விவேக் இறப்பிற்கு கொரோனா தடுப்பூசியை காரணம் காட்டி சிலர் சர்ச்சை கருத்துகளை முன்வைத்தனர். அதே போல தற்போது கே.வி.ஆனந்த் இறப்பிலும் தடுப்பூசி சர்சை எழுந்துள்ளது. 




கடந்த 20 நாட்களுக்கு முன்பு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கே.வி.ஆனந்த் கொரொனோ தடுப்பூசி செலுத்தியதாகவும்,  அதன் பின் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவருக்கு கொரொனோ தொற்று  ஏற்ப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அவருக்கு சிகிச்சையளித்த பிரபல மருத்துவமனை தரப்பில் இந்த தகவல் வெளியவந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், அந்த தகவலில் 


 ‛‛கடந்த 24 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு கே.வி.ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் இன்று காலை 3 மணியளவில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.வி.ஆனந்திற்கு தொற்று இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 20 நாட்களுக்கு முன் எடுத்துக் கொண்ட தடுப்பூசியை தொடர்புபடுத்தி சிலர் கருத்துக்களை பரப்பிவருகின்றனர். அதிகாரப்பூர்வமற்ற இது போன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என ஏற்கனவே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்களின் மரணத்துடன் அவற்றை ஒப்பிடுவதை சிலர் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். 


இருப்பினும் அது தொடர்பாக கே.வி.ஆனந்த் குடும்பத்தினர் இது வரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.