2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 160 -172 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது என ABP செய்திகள் மற்றும் சி-வோட்டர்ஸ் நிறுவனத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க ஒட்டுமொத்தமாக 58 முதல் 70 தொகுதிகளில் வெற்றிபெறும் எனக் கருத்துகணிப்புச் சொல்கிறது.
மண்டல வாரியான வாக்குப் பகிர்வில் காவிரி டெல்டா பகுதி நிலவரங்கள் கவனிக்கப்பட வேண்டியது. கிராமப்புறப்பகுதியில் 75 சதவிகிதம் பேரும் நகர்ப்புறத்தில் 21 சதவிகிதம் பேரும் இந்த மண்டலத்தில் வசிக்கிறார்கள். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கடலூர் உட்பட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த மண்டலத்தில் மொத்தம் 41 தொகுதிகள் உள்ளன. மேலும் மிகமுக்கியமாக இதுவரை டெல்டாவில் பெரும்பான்மை பெற்றவர்கள்தான் கோட்டையிலும் ஆட்சி அமைத்துள்ளார்கள் என்பதும் இங்கே கவனிக்கவேண்டியது. அந்த வகையில் டெல்டாவின் 41 தொகுதிகளில் திமுக 51.8 சதவிகித வாக்குகள் பெறும் என கணிக்கப்படுகிறது.
இது 2016 தேர்தலில் டெல்டா மண்டலத்தில் அவர்கள் பெற்ற வாக்குச்சதவிகிதத்தை விட 12.1 சதவிகிதம் அதிகம். கருத்துக்கணிப்பின்படி ஆளும் அ.தி.மு.க. 33.1 சதவிகித வாக்குகளுடன் டெல்டா பகுதியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2016 தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்தப் பகுதியில் அ.தி.மு.க.வுக்கு 11.6 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன. கடந்த தேர்தலில் டெல்டா பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. இந்த முறை கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்து 4.3 சதவிகித வாக்குகள் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர கட்சிகளான நாம் தமிழர் ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை ஒட்டுமொத்தமாக வெறும் 10.8 சதவிகித வாக்குகளே பெறுகின்றன. 2016ல் இதர கட்சிகள் டெல்டா பகுதியில் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கை 15.6 சதவிகிதம். இத்தனைக்கும் 2016ல் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதிகளில் வெற்றியைப் பொருத்தவரை டெல்டாவில் திமுக 32 முதல் 34 தொகுதிகளில் வெற்றிபெறும் எனக் கணிக்கப்படுகிறது. இது கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்கள் வெற்றிபெற்ற தொகுதிகளை விட 17 தொகுதிகள் அதிகம். டெல்டா பகுதியில் இந்தமுறை அதிமுக பெரும் பின்னடைவைச் சந்திக்கும் எனக் கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது. கடந்த தேர்தலில் அந்த மண்டலத்தில் 23 இடங்களில் வெற்றிபெற்றவர்கள் இந்த முறை 7-9 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அமமுக கூட்டணியைப் பொருத்தவரை வாக்கு சதவிகிதம் அதிகரித்தாலும் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு இல்லை. மற்ற எந்தக் கட்சிகளும் டெல்டாவில் வெற்றிபெற வாய்ப்பில்லை.