1983 மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவ கிராமங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம்
தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி தமிழ்நாடு கடற்கரை பகுதியில் கடலில் மீன்வளத்தை வளம் குன்றா வகையில் பேணிகாத்திடவும், கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை சூழ்நிலைத்தன்மையை பாதுகாத்திடவும், மீன் வளர்ப்பினை அதிகரிக்கும் பொருட்டும் மற்றும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திடவும், தமிழ்நாடு அரசால் கடலில் இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகள் அதிவேக எஞ்சின் பெருத்திய படகுகள் கொண்டு மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
நீண்ட கால பிரச்சினை
இந்நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி பயன்படுத்தும் மீனவர்களுக்கும் அதனை எதிர்க்கும் மீனவர்களுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனைகள் இருந்து வருகிறது. இப்பிரச்சனை காரணமாக அவ்வப்போது மீனவர்களிடையே மோதல் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மற்றும் தரங்கம்பாடி தாலுக்காகளை சேர்ந்த திருமுல்லைவாசல், பூம்புகார், பழையார், சந்திரபாடி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், அதனை மறுக்கும் பட்சத்தில் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மீண்டும் புகார்
இந்த பிரச்சினை ஒரு சில மாதங்காளக சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையை பயன்படுத்தும் ஒரு சில மீனவ கிராமங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மீண்டும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்திடம் மனு அளித்துள்ளனர்.
வாழ்வாதாரம் காக்க கோரிக்கை
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; மயிலாடுதுறை மாவட்டம் தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடியில் 300-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், 50 விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் வைத்து அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு மீனவர்கள் கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றோம். இந்நிலையில் மாவட்டத்தில் 28 மீனவர் கிராமங்கள் உள்ள சூழலில் தமிழ்நாடு அரசின் 1983 மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, இரட்டை மடிவலை, அதிவேக குதிரை திறன் கொண்ட அதிவேக எஞ்சின் இவற்றை பயன்படுத்தி மயிலாடுதுறையில் ஒரு சில மீனவ கிராமங்கள் அரசு விதித்த நடைமுறைகளுக்கு எதிராக சட்டத்திற்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஆகையால் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில மீனவர் கிராமங்கள் மீது நடவடிக்கை எடுத்து நாட்டுப்புற மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.