தென் தமிழகத்தில் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். 


இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி திருவிழா. 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவின் முடிவில் தசரா பண்டிகை கொண்டாடப்படும். இந்நாளில் துர்க்கை அம்மன் தர்மத்தை மீட்டெடுக்கும் பொருட்டு மகிஷாசுரனை வதம் புரிந்த நாளாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கர்நாடகா மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2வது இடத்தில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினத்தில் கொண்டாடப்படும் தசரா திருவிழா மிகவும் பிரபலமானது. 


அதன்படி நடப்பாண்டு தசரா திருவிழா கொடியேற்றமானது கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. அன்றைய தினம் குலசேகரப்பட்டினத்தில் அருள்பாலிக்கும் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்திஸ்வரர் கடவுளை வேண்டிக்கொண்டு பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று (அக்டோபர் 24) இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. குலசை திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் வேண்டுதலின்படி பல்வேறு விதமான வேடங்கள் தரித்து விரதம் இருந்து பொதுமக்களிடம் காணிக்கை பெற்று முத்தாரம்மன் கோயிலுக்கு வருகை தருவார்கள். 


இதில் சுவாமி வேடங்கள் மட்டுமல்லாது விலங்குகள், அரச பரம்பரை, போலீஸ், யாசகம் பெறுபவர் என பலவிதமான வேடங்களையும் அணிந்த பக்தர்களை இந்நாட்களில் நாம் தென் தமிழகத்தில் காணலாம். தசரா திருவிழா தொடங்கினால் போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் களைகட்டி விடும். இந்த 10 நாட்களில் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று திருவீதி உலா நடந்தது. 


இன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வில் மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் காட்சிகள் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 2,500 போலீசார் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். சூரசம்ஹாரத்தை தொடர்ந்து நாளை (அக்டோபர் 25 ஆம் தேதி) அதிகாலை 1 மணி அளவில் முத்தாரம்மனுக்கு சந்தன அபிஷேகம் நடைபெறும். காலை 6 மணிக்கு பஞ்சப்பூரத்தில் திருவீதி உலா நடைபெறும். இது மாலை 4 மணி அளவில் நிறைவுபெறும் நிலையில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு களைந்து தங்கள் 10 நாட்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Today Rasipalan, October 24: விஜயதசமி தினம் எந்தெந்த ராசியினருக்கு சிறந்த நாள்.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..!