கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கொரல்நத்தம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் 342 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 80 சதவீதம் மாணவ, மாணவிகள் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்கள். இந்த நிலையில் தற்போது இஸ்லாமிய சமூக மக்கள் கொண்டாடும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிலநாட்களாக நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் இஸ்லாமிய மாணவர்கள் சிலர் பள்ளிக்குச் செல்லும்போது நோன்பில் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அறிவியல் ஆசிரியர் சங்கர் என்பவர் மாணவர்கள் நோன்பு இருப்பதால் சோர்வு ஏற்படும் என்று படிப்பில் கவனம் செலுத்த முடியாது எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
இதனை தொடர்ந்து மாலை உடற்பயிற்சி வகுப்பு ஆசிரியர் செந்தில்குமாரும் நோன்பு இருக்க கூடாது என கூறி மாணவர்களை உடற்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்து மானவர்களுக்கு ஓட்டபந்தயம் வகுப்பு நடத்திய ஆசிரியர் நோன்பு இருந்த மாணவர்கள் சோர்வடைந்ததை கண்டு தண்ணீர் அருந்துமாறு கூறியுள்ளார். தண்ணீர் பருகினால் நோன்பு விரதம் முடிந்துவிடும் என்பதால் மாணவர்கள் மறுத்து உள்ளனர்.ஆசிரியர்களின் இந்த செயல் குறித்து அறிந்த இஸ்லாமிய மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இன்று அரசு உயர்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது பிள்ளைகளை நோன்பு இருக்க கூடாது என கூறிய ஆசிரியர்களை பணி இட மாறுதல் செய்தால் தான் இனி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் வாக்குறுதி அளித்த்ததன் அடிப்படையில் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த விவகாரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரியிடம் பேசுகையில்:- உயர்கல்வி ஆசிரியர் செந்தில் குமாருக்கு தொட்டமஞ்சி அரசு பள்ளியிலும், அறிவியல் ஆசிரியர் சங்கருக்கு கரடிக்கல் அரசு பள்ளியிலும் தற்போது பணி வழங்கப்பட்டு உள்ளது. முழுமையான விசாரணைக்கு பின்னர் ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதல் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது ஹிஜாப் பிரச்சினை நிலவும் சூழலில் ரமலான் நோன்பில் மாணவர்கள் பங்கேற்க கூடாது என ஆசிரியர்கள் கட்டாயப்படுத்திய சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வலின்னு சொன்னது குத்தமா?' வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன் செய்த அரசு மருத்துவர்