அதிநவீன சிகிச்சை மூலம் சிறுவனின் உணவுக்குழாயில் இருந்த 5 ரூபாய் நாணயத்தை அகற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் கூலிதொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் தீபக்குமார் வயது ( 11). இவர் கடந்த மாதம் 26ஆம் தேதி மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டு விளையாட சென்றுள்ளார்.  அந்த நாணயத்தை வாயில் வைத்து இருந்துள்ளார். அப்போது தவறுதலாக  நாணயத்தை விழுங்கி விட்டார்.  நாணயத்தை விழுங்கிய உடன் தொண்டையில் சிறுவனுக்கு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த சிறுவன் அழுதுள்ளார். பின்னர் இதனை கண்ட பெற்றோர் அவரிடம் விசாரிக்கையில் ஐந்து ரூபாய் நாணயம் விழுங்கியது தெரியவந்தது.


 




 


அதனைத் தொடர்ந்து பெற்றோர் சிறுவனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதையடுத்து சிறுவன் தீபக்குமாருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் உணவுக்குழாயின் தொடக்கத்தில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அவசரமாக அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சுஜய்குமார், சபரீஷ், வினோத்குமார், மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் நந்தபிரபு, சுபா, பிரவீன்குமார் தலைமையில் அதிநவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது உள்நோக்கி கருவி மூலம் நாணயம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து சிறுவன் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.




 


இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் டீன் அசோகன் கூறியதாவது:-


இது போன்ற அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில், வெளி இடங்களில் செய்ய ரூ.50 ஆயிரம் வரையில் செலவு ஏற்படும். ஆனால் தமிழக அரசால் முற்றிலும் இலவசமாக சிறப்பு வாய்ந்த காது, மூக்கு, தொண்டை பிரிவு அறுவை சிகிச்சை நிபுணர்களால், பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் மூலம் சிறந்த முறையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றார். மேலும், வீட்டில் குழந்தைகள் இருந்தால் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு சிறிய பொருட்கள் நாணயங்கள் அளிக்க வேண்டாம் என்றும் பின்னர் பெற்றோர்கள் குழந்தைகளை தங்களின் கவனத்தில் வைத்திருக்க வேண்டுமென இவ்வாறு அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண