கரூரில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தள்ளியது. மழை நீர் சாலையில் வெள்ளம் போல ஓடியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.


 




தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது.


 




 


இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. கரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில்  மழை விட்டு, விட்டு பெய்தது.  இதனை தொடர்ந்து கரூர் நகர பகுதியில்  மேல் கன மழை கொட்டித் தள்ளியது. இதனால், சாலையில் மழை நீர் தேங்கி சாக்கடை கழிவு நீருடன் கலந்து வெள்ளம் போல ஓடியது. 


 




 


கரூர் நகர பகுதிகளான பேருந்து நிலையம், வடிவேல் நகர், ஜவகர் பஜார், வையாபுரி நகர், சேலம் புறவழி சாலை உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்து வருகிறது. விட்டு, விட்டு பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. இதனால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.