ராஜேஷ் குமார் நாவலை விட கோடநாடு விவகாரத்தில் மர்மங்கள் நிறைந்ததாக உள்ளதாக  காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.


சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் பேசிய அவர், “90 நாட்களில் பிணையில் வந்த சயனும், மனோஜும் புது டெல்லியில் எதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். எதற்காக மேத்யூ சாமுவேல் அதனை ஆவணப்படமாக எடுத்தார். உடனே தமிழக காவல்துறை எதற்காக டெல்லி விரைந்தது? எதற்காக கைது செய்தது?. எதற்காக அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறாமல். நாங்கள் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை விதி 55ன் கீழ் கொடுக்கிறோம். இதை விவாதிக்க வேண்டும். விவாதிக்க முடியாது என்றால் அதை சொல்லிவிட வேண்டும். எதற்காக தேவையில்லாமல் பேச வேண்டும். எதற்கு இந்த பயம், அச்சம். தைரியமிருந்தால் நேரடியாக சட்டப்பேரவைக்கு வந்து, நாங்கள் விவாதிப்பதற்கு தயார் என்று சொல்ல வேண்டும். அதைவிடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து தேவையில்லாத கருத்துகளை கூறியுள்ளார். உண்மை ஒருநாள் வெளியில் வரும். ஜெயலலிதா உடைய ஆத்மா இருக்கிறது என்றால், இவர்களை கண்டிப்பாக என்ன நடந்தது என்று உண்மையை வெளிக்கொண்டு வருவார். அதிமுக தொண்டர்கள் இந்த வழக்கை வெளியே கொண்டு வர வேண்டும். உண்மையை நாட்டு மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த விவகாரத்தில் தற்போது உள்ள ஆட்சி கண்டிப்பாக நீதி வழங்கும்” என்று கூறினார்.


 






செல்வப்பெருந்தகை பேசியதை தொடர்ந்து, கோடநாடு விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “கோடநாடு பங்களா ஒரு தலைமைச் செயலகமாக இயங்கியது. அப்படிப்பட்ட இடத்தில் ஒரு கொள்ளையும் அதனை தொடர்ந்து கொலையும் நடந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேண்டுமானால் அது சாதாரணமாக இருக்கலாம். கோடநாடு விவகாரத்தை முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்ததே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாம்தான். ஆனால், இப்போது அந்த பிரச்னையை சட்டப்பேரவை உள்ளே பேசக்கூடாது என அதிமுக சொல்வது முரணாக உள்ளது” என்று கூறினார்.


முன்னதாக,கோடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “காங்கிரஸின் செல்வ பெருந்தகை கோடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவதாக கூறியுள்ளார். சட்டமன்றத்தில் விவாதிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. கோடநாடு  விவகாரம் அத்தனை அவசரமா?. குடிநீர் பிரச்சனை,  மக்கள் பிரச்னை,  இயற்கை பேரிடர்கள் குறித்து அவசர பிரச்னையாக சட்டமன்றத்தில் பேசுவார்கள். ஆனால், சட்டமன்ற மரபுகளை மீறி செல்வப்பெருந்தகை கோடநாடு குறித்து பேசப்போகிறார். செல்வப்பெருந்தகை திமுகவின் கைபாவை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கோடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிக்கின்றனர். நீதிமன்ற அதிகாரத்தை சட்டமன்றமோ, சட்டமன்ற  அதிகாரத்தை நீதிமன்றமோ கையில் எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து  விதி எண் 55-ல் சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபை மீறிய செயல் ஆகும். கோடநாடு விவகாரம் குறித்து பேசி, எடப்பாடி பழனிச்சாமிக்கு மன ரீதியான அழுத்தத்தை கொடுத்து சுதந்திரமாக அதிமுகவினர் சட்டமன்றத்தில் பேசவிடாமல் செய்ய உரிமை மீறல் நடக்கிறது. கோடநாடு விவகாரம் சட்டமன்றத்தில் பேசினால் நீதிமன்ற விசாரணை திசைதிரும்பிவிடும். அதிமுக யாருக்கும் எதற்கும் பயப்படவில்லை. உரிமை மீறல் என்பதால் பேரவையில் இருந்து வெளிநடப்பை செய்து அதிமுகவினர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். விழுப்புரத்தில்  சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.


கோடநாடு விவகாரம்: கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு; பூதாகரமாகும் சயன் வாக்குமூலம்!