பாலியல் வழக்கில் சிக்கிய பாபா:
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷீல் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளி மாணவிகளிடம் அதன் நிறுவனர் சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். சிவசங்கர் பாபாவின் பாலியல் சீண்டல்களுக்கு உடைந்தையாக இருந்தவர்களையும் போலீஸ் கைது செய்துள்ளது. ஆனால், சிவசங்கர் பாபாவின் நிறுவன அட்மின் ஜானகியிடம் உரிய விசாரணை நடத்தினால் முழு உண்மையும் தெரியவரும் என அப்போது பலர் வலியுறுத்தினர்.
கே.டி.ராகவனும், அட்மின் ஜானகியும்:
இந்த நிலையில், சிவசங்கர் பாபாவின் தீவிர பக்தரும், சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தின் தலைவருமான நடிகர் சண்முகராஜா அட்மின் ஜானகி மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்று வரும் கே.டி.ராகவன் மீதும் பகீர் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சண்முகராஜா, “சிவசங்கர் பாபாவின் நிறுவனமான சம்ரட்சணாவின் அட்மின் பொறுப்பில் இருக்கும், சாதிய மனோபாவத்துடன் நடந்து கொள்கிறார். 20 ஆண்டுகளாக சிவசங்கர் பாபாவின் பக்தர்களாக இருக்கும் அடித்தட்டு மக்களை விரட்டி அடிக்கிறார். மடத்துக்குள் உயர்சாதியினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சுஷீல்ஹரி பள்ளியில் படிக்கும் சாதாரண மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதல் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வருகிறார். பள்ளி உட்பட சிவசங்கர் பாபா நிறுவன கட்டிடப் பணி உட்பட அனைத்திலும் ஊழல் செய்து வருகிறார். இதற்கு பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி.ராகவனும் உடந்தை. அவரது அடியாட்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஆசிரமத்தில் தங்கி இருந்து அங்கும் வரும் பக்தர்களை மிரட்டியும் விரட்டியும் வருகின்றனர். சிவசங்கர் பாபா சிறையில் இருப்பதை வாய்பாக பயன்படுத்திக் கொண்டு அவரது பிராமணர் அல்லாத பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் பிரசாதம் செய்த கோவில்களை அபகரிக்க ஜானகி முயற்சி செய்கிறார். பிற சாதியின் கோயில் கதவுகளை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். குகை நமச்சிவாயர் கோயில் கதவை உடைத்ததை எதிர்த்துக்கேட்ட பெண்ணை தாக்கியுள்ளனர். அனைத்தும் ஜானகிக்கு தெரியும், எனவே அவரை அழைத்து விசாரித்தால் பல திருப்பங்கள் உருவாகும் என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம்:
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கே.டி.ராகவன் மீது சண்முகராஜா முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்றார். இது தொடர்பாக அவர் சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வார் என அண்ணாமலை தெரிவித்தார்.