கோடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “காங்கிரஸின் செல்வ பெருந்தகை கோடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவதாக கூறியுள்ளார். சட்டமன்றத்தில் விவாதிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. கோடநாடு  விவகாரம் அத்தனை அவசரமா?. குடிநீர் பிரச்சனை,  மக்கள் பிரச்னை,  இயற்கை பேரிடர்கள் குறித்து அவசர பிரச்னையாக சட்டமன்றத்தில் பேசுவார்கள். ஆனால், சட்டமன்ற மரபுகளை மீறி செல்வப்பெருந்தகை கோடநாடு குறித்து பேசப்போகிறார். செல்வப்பெருந்தகை திமுகவின் கைபாவை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கோடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிக்கின்றனர். நீதிமன்ற அதிகாரத்தை சட்டமன்றமோ, சட்டமன்ற  அதிகாரத்தை நீதிமன்றமோ கையில் எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து  விதி எண் 55-ல் சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபை மீறிய செயல் ஆகும். கோடநாடு விவகாரம் குறித்து பேசி, எடப்பாடி பழனிச்சாமிக்கு மன ரீதியான அழுத்தத்தை கொடுத்து சுதந்திரமாக அதிமுகவினர் சட்டமன்றத்தில் பேசவிடாமல் செய்ய உரிமை மீறல் நடக்கிறது. கோடநாடு விவகாரம் சட்டமன்றத்தில் பேசினால் நீதிமன்ற விசாரணை திசைதிரும்பிவிடும். அதிமுக யாருக்கும் எதற்கும் பயப்படவில்லை. உரிமை மீறல் என்பதால் பேரவையில் இருந்து வெளிநடப்பை செய்து அதிமுகவினர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். விழுப்புரத்தில்  சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.


இதனிடையே, கோடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.




முன்னதாக, கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் விவாதத்தில் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், கோடநாடு வழக்கு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்படி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கோடநாடு தொடர்பாக என்ன நோக்கத்திற்காக விசாரணை நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரின் அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை எனவும் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பதிலளித்தார். முதல்வரின் பேச்சுக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். 


இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தின் வெளியே வந்த அதிமுக உறுப்பினர்கள், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.