தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகளும், சட்டமன்ற உறுப்பினர் உதயந்தியின் மனைவியுமான கிருத்திகாவின் ட்வீட் தமிழக சட்டப்பேரவை வரை எதிரொலித்துள்ளது.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பொதுப் பணியில் அறியப்படுவதற்கு முன்னரே களப்பணியாளராக அறியப்பட்டவர் அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின்.
பெண்கள் நலம், திருநங்கைகள் நலன் எனப் பல்வேறு சமூக விவகாரங்களையும் தன்முனைப்புடன் கவனித்தவர் கிருத்திகா உதயநிதி.
அண்மையில் இவர் ஒரு வீடியோவை ட்வீட்டரில் பதிவு செய்திருந்தார். அந்த ட்வீட் கவனம் ஈர்த்தது. நெட்டிசன்கள் கவனத்தை மட்டுமல்ல தமிழக சட்டப்பேரவையின் கவனத்தையும் அது ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில் கிருத்திகா என்ன பேசியிருந்தார்..
சட்டப்பேரவை கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு அப்படியென்ன கிருத்திகா பேசியிருந்தார் தெரியுமா?
"நாம யாருமே பொதுக் கழிப்பறை பக்கமே போக மாட்டோம். என் பயணங்களின் போது நான் நிறையமுறை, யார் என்றே தெரியாதவர்கள் வீட்டில் கதவைத் தட்டி, அவர்கள் டாய்லெட்டை பயன்படுத்திக்கலாமா? என்று அனுமதி கேட்டுள்ளேன். அதுதான் நம்மூர் கழிவறைகளின் நிலைமை. இதற்கு ஒரு தீர்வு வர வேண்டும் என்பதற்காகத்தான் சென்னை மாநகராட்சி உள்பட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் ஏப்ரல் 2,3 தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேப்பத்தான் சாந்தோம் உயர் நிலைப் பள்ளியில், ரீசைகிள் பின், சியர் ஆர்கனைசேஷன், டச் மினிஸ்ட்ரி, சென்னை மாநகராட்சி என பலதரப்பு இணைந்து நடத்தக் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி அது. இந்த அமைப்புகள் அனைத்தும் இணைந்து சென்னையிலுள்ள பொதுக் கழிவறைகளை அடையாளம் காண உள்ளன. பொதுக் கழிவறைகளை எப்படி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம் என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளன. ஆகையால், உங்களுடைய கழிப்பறை அனுபவ கதையை #OnceinaLOO என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு உங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்ய வேண்டும். இதன் மூலம் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு பலரிடம் சென்றடையும்" என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ வைரலானது.
இது குறித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் விசிக எம்எல்ஏ அளூர் ஷானவாஸ் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், "தமிழகத்தில் கழிப்பிட வசதிகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக சுற்றுலா பகுதிகளில் மேம்படுத்தப்பட வேண்டும். இயற்கை உபாதைகளை கழிக்க ஆங்காங்கே சரியான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி கிருத்திகா உதயநிதி, கழிப்பிட கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதை விசிக சார்பில் வரவேற்கிறேன். கழிப்பிட கட்டமைப்புகளை உலகத் தரத்திற்கு தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.