கேரளாவில் வசித்து வருபவர் ஆசிம் வெளிமன்னா, மாற்றுத்திறனாளியான இவர் தன்னைப் போல பல மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். இந்த நிலையில், இவர் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார். சென்னைக்கு தனது குடும்பத்துடன் வருகை தந்த வெளிமன்னா அமைச்சர் உதயநிதியை சந்தித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தம்பி வெளிமன்னா, தன்னைப் போல மாற்றுத்திறனுள்ள குழந்தைகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் உலக அளவில் அறியப்படுகிறார். அதன்மூலம், பல்வேறு அங்கீகாரங்களை பெற்று வருகிறார். சென்னை வருகை தந்துள்ள தம்பி வெளிமன்னா, அவரது குடும்பத்தாருடன் இன்று நம்மை சந்தித்து அன்பை வெளிப்படுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளின் நலன் சார்ந்து அவர் எடுத்துவரும் முன்னெடுப்புகளை கேட்டறிந்து, அவருடைய பணிகள் சிறக்க வாழ்த்தினோம்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.