இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ரயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்து தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கவரப்பேட்டை ரயில் விபத்து:


மைசூரில் இருந்து சென்னை வழியாக பீகார் நோக்கி தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் செல்வது வழக்கம். இந்த சூழலில், மைசூரில் இருந்து பீகார் நோக்கி சென்ற தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.


22 பெட்டிகளில் சுமார் 1500 பயணிகளுடன் சென்ற இந்த ரயில் கவரப்பேட்டை அருகே ரயில்நிலையத்தை நெருங்குவதற்கு முன்பு, தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதனால், 10 பெட்டிகள் தடம்புரண்டது. இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது. இந்த திடீர் விபத்தால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மாற்று ரயில்:


ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், ரயிலில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அருகில் இருந்த கிராமத்து மக்களும் உதவி செய்ய சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப்படை மற்றும் போலீசார் உதவியுடன் காயம் அடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். ரயிலில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 1500 பயணிகளும் அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.






இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று அதிகாலை 4.45 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக இந்த ரயில் விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த ரயில் விபத்தில் 19 பேருக்கு காயம் எஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கவரப்பேட்டையில் விபத்து நடைபெற்ற இடத்தில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மழையால் மீட்பு பணிகள் தொய்வு:


மேலும், காயம் அடைந்தவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து காரணமாக சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது,


மேலும், கவரப்பேட்டை பகுதியில் மழை பெய்து வருவதால் ரயில் விபத்து மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 கிரேன்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.