எனது அப்பா பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதால் தங்கள் திருமணத்திற்கு எந்த தடையும் ஏற்படவில்லை என துருக்கி இளைஞரை கரம் பிடித்த கரூரை சேர்ந்த தமிழ் பெண் மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார்.


 




 


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா, பி.டெக் பட்டதாரியான இவர் டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்போது துருக்கி நாட்டை சேர்ந்த எம்.டெக் பட்டதாரி இளைஞரான அஹமத் கெமில் கயான் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் துருக்கியில் தொழில் செய்து வரும் அந்த இளைஞருக்கும், பிரியங்காவிற்கும் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. 


 




 


இதனை தொடர்ந்து இருவரும் அவர்களது பெற்றோரிடம் திருமணம் குறித்து தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு  திருமணம் மணமகள் வீட்டில் எளிமையாக தமிழ் முறைப்படி நடைபெற்றது. மாப்பிள்ளை அழைப்பு, தாலி கட்டுதல், கன்னி தானம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் இரு வீட்டாரை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், இரு தரப்பிலும் மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


 




 


டெல்லியில் பணியாற்றி வரும் பிரியங்கா பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்வதில் பிரியம் கொண்டவர். அதேபோல் துருக்கி இளைஞர் அஹமத் கெமில் கயானும் சுற்றுலா செல்வதில் விருப்பம் கொண்டவர். அப்படி ஒரு சமயத்தில் இருவரும் டெல்லியில் சந்தித்து நட்பாகி, காதலிக்க துவங்கியதாகவும், தங்கள் காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியதாகவும் தெரிவித்தனர். பிரியங்காவின் குடும்பம் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதால் துருக்கி இளைஞரை கரம் பிடிப்பதில் எந்தத் தடையும் வரவில்லை என்று தெரிவித்தார். அதேபோல் மணமகன் குடும்பத்திலும் தங்கள் காதலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றார். மணமகனுக்கு ஐந்து மொழிகள் தெரியும் எனவும், ஆறு மாதத்தில் தமிழ் மொழியையும் கற்றுக் கொள்வார் எனவும் கூறினார்.