க.பரமத்தி பகுதியில் கோடை வெப்பம் தொடங்குவதற்கு முன்பு சதம் அடித்த வெயில் அளவு. நெடுஞ்சாலையில் கானல் நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.


 




தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே, மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலங்களில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இந்த நிலையில் பருவகால மாற்றத்தின் காரணமாக கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் மிதமான வெயில் அடிக்க வேண்டிய இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரிக்கிறது.  இதனால் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்துகிறது. பகலில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் இரவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது.


 




க.பரமத்தி பகுதியில் வெயில் சதத்தை தொட்டு நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது காலை  வெயில் கொளுத்த தொடங்குகிறது  கரூர் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் அனல் காற்று வீசுகிறது. மேலும் இதனால் சாலைகளில் கோடை காலத்தை போல கானல் நீர் தோன்றியது. வெயிலின் தாக்கம் காரணமாக வாகனஓட்டிகள் அவதியடைந்தனர். இந்த வெயில் கொடுமையால் பகல் நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.


சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகத்தில் துணியை மூடிக்கொண்டும், ஹெல்மெட் அணிந்தும் சென்று வருகின்றனர். பொதுமக்கள் சிலர் வெயிலின் தாக்கத்தை உணர்ந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.


 




 


சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மரங்களை வெட்டி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது இதனால் வெயிலில் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள நெடுஞ்சாலை ஓரமாக மரங்களை நட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தான்தோன்றிமலை சாலை மில்கேட் அருகே தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்.


கரூர் தாந்தோணிமலை சாலை மில்கேட் அருகே வாகனங்கள் முறையின்றி நிறுத்தப்படுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தான்தோணி மலை வழியாக திண்டுக்கல் திருச்சி பைபாஸ் சாலை போன்ற பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இதில் தாந்தோணி மலை இடையே கடைவீதியை தாண்டியதும் மில்கேட் பகுதி உள்ளது. மில்கேட் பகுதியில் இருந்து வடக்கு தெரு வா.ஊசி தெரு, குறிஞ்சி நகர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை சென்று வருகிறது.  இந்த இடத்தில் தனியார் மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மில்கேட் சந்திப்பு பகுதியில் இருந்து தனியார் மருத்துவமனை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரிவின் பகுதியின் வளைவு பாதையை மறைக்கும் வகையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார் போன்ற வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் இந்த சாலையில் எளிதாக செல்ல முடியாமல் அவ்வப்போது விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.


இந்த பகுதியின் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில் வளைவு பாதையோரம் வாகனம் நிறுத்த செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் தனியார் மருத்துவமனைக்கு பிரியும் பகுதியில் வாகன நிறுத்தத்தை கண்காணித்து அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றன. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பார்வையிட்டு தேவையான சீரமைப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.