அதிமுக விதியை மீறி ஓபிஎஸ் நீக்கம்: நீதிபதி விளக்கம்


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதில் கட்சி விதி மீறப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து ஒரு நபரை நீக்கும் முன் 7 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற கட்சி விதி மீறப்பட்டுள்ளது. இருப்பினும் இடைக்கால தடை விதித்தால் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்சிக்கு இழப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்க முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 


ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு ஏன்..? 


பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால் அதிமுகவை வழிநடத்த தலைவர் இன்றி கட்சி பாதிக்கப்படும். தீர்மானங்களுக்கும் தேர்தலுக்கும் தடை விதித்தால் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும். தீர்மானங்களுக்கு தடை விதித்தால் ஒருங்கிணைப்பாளர்கள்தான் மீண்டும் கட்சியை நிர்வகிக்க வேண்டிவரும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். 


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:


அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாகவும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, அதற்கான படிவத்திலும் கையெழுத்திட்டு பொதுச்செயலாளராக தேர்வானார். 


வழக்கு விவரம்:


அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டமானது கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, ஓபிஎஸ் நீக்கம் உள்பட சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.


இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் இந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக அமைந்தது. தொடர்ச்சியாக நடந்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு கொண்ட அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. 


இதனால், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்துக்கு சென்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் பின்னடைவாக அமைந்தது. அதே நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது. 


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள், தகுதி நீக்கம் ஆகியவற்றிற்கு எதிராக ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.