கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. கோடை மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் வாட்டி வதைத்து வரும் நிலையில் நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் முழுவதும் காலை முழுவதும் வெயில் தாக்கம் இருந்த நிலையில் மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது கரூர் மாநகர் பகுதி, வெங்கமேடு, வெண்ணமலை, தாந்தோணி மலை, காந்திகிராமம், மண்மங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
மாலை நேரத்தில் பெய்து வரும் மழையால் வேலை முடிந்து வீடு செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு செல்கின்றனர். இடியுடன் கூடிய மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை - வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.
மேலும் கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், பரமத்தி, வேலாயுதம்பாளையம், நொய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இரவு பள்ளப்பட்டி கணக்குப்பிள்ளை தெரு பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் மற்றும் கழிவு நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மழைநீர் வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.