நடிகர் விஜய் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் நடைபெற்றது. விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை கடும் எச்சரிக்கை
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட காவல் துறையும் விசாரணை நடத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட 2 பேரை கைது செய்துள்ளனர். கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக எந்த வதந்திகளையும் சமூக வலைதளத்தில் பரப்பக் கூடாது என்றும், காவல் துறை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூக வலைதளங்களில் பரவிய தகவல்
கரூரில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே அமைந்துள்ள அக்ஷயா மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்லவில்லை என்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் 11 பேர் அக்ஷயா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு 6 ஐசியு படுக்கைகள் மட்டுமே இருந்துள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்களும் அங்கு சென்றுள்ளனர். அக்ஷயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
உண்மை நிலை என்ன?
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி காசோலை மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
தகவல் உதவி : தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு