கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த நிகழ்விற்குப் பிறகு, உடனடியாக சென்னை திரும்பிய விஜய் மற்றும் நிர்வாகிகள், இதுவரை பொதுவெளியில் வராமல் இருந்தனர். இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, விரைவில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இருப்பதாக கூறினார்.
கரூர் சம்பவத்திற்குப் பின் காணாமல் போன தவெக நிர்வாகிகள்
கரூரில் கடந்த சனிக்கிழமையன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். மதியம் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்விற்கு, இரவில் தான் வந்து சேர்ந்தார் விஜய். இந்நிலையில், காலை முதலே அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் கரூர் வேலுச்சாமிபுரத்தில் திரண்டிருந்தனர்.
ஆனால், விஜய் வருவதற்கு இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. இதனால், அந்த சிறிய பகுதியின் கொள்ளளவிற்கு மேல் மக்கள் கூடியிருந்தனர். இதையடுத்து, கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசலாக மாறியது. விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின.
விஜய்யின் பிரசார வாகனத்திற்கு அருகேயே ஒரு பெண் மயக்கமடைந்த நிலையில், அவருக்கு விஜய்யே தண்ணீர் வழங்கினார். பின்னர் வாகனத்தில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில்களை கூட்டத்தில் வீசினார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே தனது உரையை விஜய் முடித்துவிட்டு கிளம்பினார்.
அவர் கிளம்பிய சில நொடிகளில், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஆங்காங்கே ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. ஆனாலும், பல மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும்போதே உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.
இதனால், பலி எண்ணிக்கை மெல்ல மெல்ல உயரத் தொடங்கி, இரவு முழுவதும் கரூர் பெரும் பரபரப்பானது. தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்த நிலையில், நள்ளிரவில் புறப்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அதிகாலையில் அங்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.
இதனிடையே, இச்சம்பவம் அரங்கேறிய வேளையில், தவெக நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. மேலும், இரவோடு இரவாக விமானம் ஏறி சென்னை வந்து சேர்ந்தார் விஜய். அன்று வீட்டிற்குள் போன விஜய், நேற்றுதான் நீலாங்கரை வீட்டிலிருந்து கிளம்பி பட்டினப்பாக்கம் வீட்டிற்கு சென்று வந்தார். அவர், இச்சம்பவத்திற்கு மறுநாள் இரங்கல் செய்தி போட்டதோடு, இன்னும் பேசவில்லை.
தவெக நிர்வாகிகளும் யாருமே செய்தியாளர்களை சந்திக்கவும் இல்லை, இது குறித்து எதுவும் பேசவும் இல்லை. இந்நிலையில், இப்பிரச்னை பெரிதாக, இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்திலும் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திலும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறும் நிலையில், பாஜக டெல்லியிலிருந்து ஒரு குழுவை அனுப்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விஜய்யை தொடர்புகொண்டு பேசினார். இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.
இப்படி கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவத்திற்குப் பின் முதன் முறையாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆதவ் அர்ஜுனா கூறியது என்ன.?
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, விரைவில் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளதாக கூறினார். தொடர்ந்து, அவரது சர்ச்சைக்குரிய பதிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தான் எதையும் பேசும் மனநிலையில் தற்போது இல்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டு வருவதாகவும், ஆனால் அனுமதி மறுக்கப்படுவதாகம் ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.