பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாளை கொண்டாட பாஜக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ல் குஜராத்தில் பிறந்தார். இளமைக்காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ்,, எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பில் இணைந்து செயலாற்றிய அவர், பாஜகவிலும் தொண்டர் நிலையில் இருந்து படிப்படியாக உயர்ந்து, குஜராத் மாநிலம் முதல்வர் பதவியை அடைந்தார். 




பின் பாஜக மேலிடம் 2014 இல் நடந்த லோக்சபா தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது. தேர்தலில் வெற்றி வாகை சூடிய நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பை ஏற்றார். இதை தொடர்ந்து, 2019 இல் நடந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக பதவியை ஏற்றார். இன்று 72 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமருக்கு உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்தனர். நாட்டு மக்களும் கொண்டாடி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் பாஜக சார்பாக விளையாட்டு போட்டி மற்றும் ரத்ததானம் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பாஜக நிர்வாகிகள் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.




இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் ஏற்பாட்டில் கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று பாஜக மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பாக கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் கலந்து கொண்டு  போட்டியை தொடங்கி வைத்தார்.




அதை தொடர்ந்து, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு இடங்களில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ரத்ததான முகாமில் பாஜக நிர்வாகிகள் ஆர்வத்துடன் ரத்ததானத்தை வழங்கி வருகின்றனர். மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடும் அன்னதானமும் நடைபெற்று வருகிறது.




பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பல்வேறு இடங்களில் சிறப்பாக பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை, கரூர் பாஜக மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் அதன் நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்தனர்.