கரூரில் வீட்டை காலி செய்யக்கோரி தொந்தரவு தருவதாக கணவனை இழந்த பெண் தனது மகன், மகளுடன் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் அடுத்த திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மேத்தா (35) இவருக்கு கௌசிக் (13) என்ற மகனும் ஆதனா (12) என்ற மகளும் உள்ளனர். மேத்தாவின் கணவர் முரளித்துரை கடந்த 2018 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். 




கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள 1050 சதுர அடி அளவுள்ள மனையில், மேத்தாவின் மாமியார் மணி பெயரில் கடை மற்றும் வீடு உள்ளது. மேத்தா முரளிதுறை இறப்பதற்கு முன்பிருந்தே மேல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சொத்தின் மீது பெற்ற வங்கி கடன் காரணமாக, சொத்து ஏலத்திற்கு போகும் சூழ்நிலையில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சொத்தை மீட்டு தரக் கோரி மணி திருச்சியை சேர்ந்த அசோக்குமார் என்பவரை நாடி உள்ளார். 




அசோக்குமார் தனது மனைவி அம்பிகா என்பவர் பெயரில் சொத்துக்கான உரிய விலை கொடுத்து வாங்கியதோடு, உரிய தொகையை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அசோக் குமாருக்கு தனது மாமியார் சொத்தை விற்கவில்லை எனவும், வீட்டை விட்டு தன்னையும், தனது குழந்தைகளையும் காலி செய்வதற்காக அசோக்குமாரை வைத்து போலியாக நாடகம் நடத்துவதாகவும் புகார் தெரிவித்தார். மேலும், தனக்கு சேர வேண்டிய பங்கை கொடுக்காமல் ஏமாற்றி வீட்டை விட்டு காலி செய்யுமாறு ஆட்களை வைத்து தொந்தரவு செய்வதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். 




இதுகுறித்து அசோக்குமார் கூறும் போது, முரளிதரன் இறப்பதற்கு முன்பாகவே கடந்த 2012 ஆம் ஆண்டு தனது அம்மா மணி பெயரில் உள்ள சொத்தில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒப்படை பத்திரம் எழுதிக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால், கணவரை இழந்து, குழந்தைகளுடன் தனியாக தவித்து வரும் தன்னை குடியிருக்கும் வீட்டை விட்டு காலி செய்யுமாறு தொந்தரவு செய்வதாக மேத்தா கதறி அழுதது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.