உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆராய்ச்சி படைப்புகளில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து NASA விண்ணுக்கு அனுப்பி வருகிறது. 6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் ஆராயப்பட்டு அதில் வெறும் 120 படைப்புகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். இந்தப் படைப்புகள் Sounding Rocket களிலும் Research Balloon-களிலும் விண்வெளிக்கு செலுத்தப்படும்.
அவ்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 120 படைப்புகளில் கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள செம்மணக்கோன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த டிராவிட் ரஞ்சன்-ன் உயிரியல் செயற்கைகோளும் இடம்பெற்றுள்ளது. இந்த உயிரியல் செயற்கைக்கோள், வரும் செப்டம்பர் மாதம் NASA வின் columbia facility ல் இருந்து Research Balloon - இல் விண்ணுக்கு செல்கிறது. 218 அடி நீளமும் 146 அடி அகலமும் கொண்ட இந்த Research Balloon பூமியில் இருந்து சுமார் ஒரு இலட்சத்தி இருபதாயிரம் அடி மேலே சென்று வளிமண்டல எல்லைக்கு மேலே நிலை பெறும்.
இந்த உயிரியல் செயற்கைக்கோள் ஒரு ஃபெம்டோ வகை செயற்கைக்கோள் ஆகும். இந்த உயிரியல் செயற்கைக்கோள், கதிர்வீச்சுகளால் செடிகளில் ஏற்படும் மரபணு மாற்றத்தை பற்றியும், இந்த மாணவன் செடிகளிலிருந்து கண்டுபிடித்த F - காம்பவுன்ட் என்னும் கெமிக்கலின் திறனைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யவுள்ளது. இந்த செயற்கைக்கோள் உலகத்திலேயே மிகச் சிறிய மற்றும் மிகவும் எடை குறைவான உயிரியல் செயற்கைக்கோள் ஆகும்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்து நாசாவிற்கு செல்லும் முதல் உயிரியல் செயற்கைகோளும் இதுவே. இந்த உயிரியல் செயற்கைக்கோளுக்கு மாணவர் SMKT என பெயரிட்டுள்ளார். அதாவது, செம்மணக்கோன்பட்டி தமிழ்நாடு என்று தன்னுடைய கிராமத்தின் பெயரை வைத்துள்ளார்.
இவரது தந்தை மருதமுத்து விவசாய கூலி வேலை செய்து வருகிறார். தாய் கௌசல்யா சிறிய அளவிலான டெய்லரிங் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடை மூலமாக வரும் வருமானத்தில்தான் இவர்களது வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். எதிர்காலத்தில் விண்வெளிக்கு பல செயற்கைக் கோள்களை அனுப்ப வேண்டும் என்ற இலக்கோடு செயல்படும் இந்த மாணவன் தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
உலக அளவில் எடை குறைவான செயற்கைக்கோள் உருவாக்கிய கரூர் பள்ளி மாணவனுக்கு பல்வேறு விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இளம் விஞ்ஞானிகள் சேட்டிலைட் தயாரிக்கப்பட்டு தற்போது புதிய சாதனை படைத்துள்ளனர்.
இந்திய அளவில் தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் மாணவன் தயாரித்த சேட்டிலைட் நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பரிந்துரையை ஏற்று விண்ணில் ஏவப்படும் பெருமை மிகுந்த கரூர் மாவட்டத்திற்கு இன்னும் பல்வேறு இளைஞர்கள் சாதனை படைக்க சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.