’தினத்தந்தி சிந்துபாத்’ போல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவிற்கும், தமிழக அரசுக்கும் எதிராக நாள் தவறாமல் புகார் பட்டியல் வாசித்து வருகிறார். இதில் உண்மை எந்தளவு பொய் எந்தளவு என்பதை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் திணறி அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு முக்கியத்துவம் தருவதால் அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது.


அண்ணாமலைக்கு இதுபோன்ற  செய்திகள் எங்கிருந்து கிடைக்கின்றன? பலரையும் துளைத்தெடுக்கும் இந்த கேள்விக்கு விடைகாண மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த சுவாரசிய  தகவல்கள் இதோ;


ஆளுநர் மாளிகை. அண்ணாமலையின் பிரதான தகவல் அங்காடி. இங்குதான், தமிழக அரசின் துறைவாரியான அறிக்கைகள், ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பி வைக்கப்படும். இதுபோக ஆளுநரின் உத்தரவின் பேரிலும் கோட்டையிலிருந்து ராஜ்பவனுக்கு கோப்புகள் அனுப்பப்படும். இதில் வில்லங்கமான விவகாரங்கள் ஏதேனும் இருந்தால் அது பற்றிய தகவல்கள் அண்ணாமலைக்கு பறக்கிறதாம்.


திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகவும் நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் வரவு செலவு விவகாரங்களை ஆய்வு செய்து தணிக்கைக்கு உட்படுத்தும் ஆடிட் அண்ட் அக்கௌண்ட் ஜெனரல் அலுவலகத்திலிருந்தும் அண்ணாமலைக்கு தகவல் அணிவக்குக்கிறதாம். குறிப்பாக தணிக்கை அறிக்கைகளில் ஏதாவது பொறி தட்டினால் அது பற்றிய விபரங்களை அண்ணாமலைக்கு அளிக்க வேண்டும் என்றும் டெல்லி உத்தரவிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.


பல்வேறு விஷயங்களில் அரசுடன் முரண்பட்டு நிற்கும் தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சிலரையும்  அண்ணாமலை தனது நியூஸ் சோர்ஸ்களாக பயன்படுத்தி வருவதாக அறிய முடிகிறது. நள்ளிரவு நேரங்களில் புறநகர்ப் பகுதிகளிலுள்ள ரிசார்ட்டுகளில் இரு தரப்பும் சந்தித்து பேசிக் கொள்வதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் சித்தரஞ்சன் சாலைக்கு நோட் போட்டிருக்கின்றன.


அதேபோல், ஐபிஎஸ் / ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிலும் திமுக ஆதரவு – அதிமுக ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருக்கும் அதிகாரிகளில் சிலரும் அண்ணாமலைக்கு அரசின் ரகசிய முடிவுகள் குறித்தெல்லாம் தகவல்களை அனுப்பி வருகின்றனர் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


பொதுவான தகவல் பரிமாற்றத்திற்காக ஒன்றிய, மாநில உளவுப் பிரிவினர் பல நேரங்களில் இணைந்து செயல்படுவது வழக்கம்.  இதைப் பயன்படுத்திக்கொண்டு மாநில உளவுப் பிரிவினரின் வாயைப் பிடுங்கி அதை அப்படியே அண்ணாமலையிடம் கொண்டு சேர்க்கும் பணியை ஒன்றிய உளவுப் பிரிவைச் சேர்ந்த சிலர் கச்சிதமாக செய்து வருகிறார்களாம். கடலோர காவல் படையைச் சேர்ந்த ஒரு உயரதிகாரியின் பங்களிப்பு இதில் அதிகம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.


இவர்கள் தவிர ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர்கள், பாஜக ஆதரவு பத்திரிகையாளர்கள் என நீளுகிறது…அண்ணாமலைக்கு தகவல் அளிப்போர் பட்டியல். மத்திய அரசு தொடங்கி உள்ளூர் பத்திரிகையாளர்கள் வரை இவ்வளவு பெரிய டீம் இருந்தும் தகவல்களை ஒருங்கிணைத்து, தரவுகளை ஒன்றுக்கு பலமுறை சரி பார்ப்பதில் அண்ணாமலை கனக்கச்சிதமாக செயல்படுவதில்லை என்று அவர் மீது கட்சி வட்டாரங்களிலும் அதிருப்தி அலை வீசத் தொடங்கியிருக்கிறதாம்.


இது பற்றி  நம்மிடம் பேசிய தற்போது பாஜகவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அந்த மூத்தத் தலைவர், ‘’ அண்ணாமலையை பொறுத்தவரை அவர் அறிவுபூர்வமாக எதையும் சிந்திப்பதுமில்லை, செய்வதுமில்லை. திமுக மீதான ஆத்திரத்தை அவசரக்கோலத்தில் கொட்டுகிறார். மிக பில்டப் கொடுக்கப்பட்ட அவரது ஊழல் குற்றச்சாட்டு புஸ்வாணமாகி, நாலு பேர் சிரிக்கும் நிலையாகிவிட்டது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது அண்ணாமலையை பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மையாகி இருக்கிறது’’ என்றார்.


அதேபோல, அண்ணாமலை ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அவருக்கு நெருக்கமான பாஜக பிரமுகர்களோ ‘வெறுமனே குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவிட்டு கடந்து செல்லும் தமிழக அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஆதாரங்களை அடுக்கி, அதுவும் ஊடகத்தினர் முன்னர் ஆதாரங்களை அவர் வெளியிட்டு வருவதால், ஆட்சியாளர்கள் அதிர்ந்துபோய் உள்ளனர்’ என்கின்றனர்.


அண்ணாமலையின் அளிக்கும் ஆதாரங்கள் தமிழக அரசியலை அதகளப்படுத்துமா ? இல்லை அனாமத்தாக போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.