அரசுப் பள்ளிகளில்  எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில் அதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 2018 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 2381பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. அவர்களுக்கென தனி இருக்கைகள், தனி சீருடைகள் வழங்கப்பட்டு வந்தன. கிராமப் புறங்களில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இடைநிலை ஆசிரியர்கள் மழலையர் வகுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.  


இதனிடையே இவர்கள் அனைவரும் மீண்டும் பணியாற்றிய தொடக்க , ஆரம்ப பள்ளிகளுக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு அதிமுக,பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில் இந்த சம்பவத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தொடக்கக் கல்வி இயக்ககம் 1 முதல் 8 வகுப்புகள் வரையுள்ள பள்ளிகளையும், பள்ளிக் கல்வி இயக்ககம் 6 முதல் 12 வகுப்புகள் வரை உள்ள பள்ளிகளையும் நிர்வகித்து வருகிறது. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 22,831 அரசு தொடக்கப் பள்ளிகள் 6,587 அரசு நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 23,40,656 ஆகும். பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 ஆகும்.


சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சித் திட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 40,000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, இந்த அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகள் 5 வயது நிரம்பிய பின்னர் நமது அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுவர்.


2019-2020ஆம் கல்வியாண்டில் அரசாணை (நிலை) எண்.89, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (எஸ்.டபிள்யு-7(1)த் துறை, நாள்.11.12.2018-ன்படி, 52,933 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்கள் கண்டறியப்பட்டு, அம்மையங்களில் LKG மற்றும் U.K.G வகுப்புகள் பரிட்சார்த்த முறையில் துவங்கிட ஆணை வெளியிடப்பட்டது. இந்த அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்கள் பணி மற்றும் பணி மாறுதல் மூலம் ஆணைகள் வழங்கப்பட்டு LKG மற்றும் UKG  வகுப்புகளை ஒரு சேர நடத்தும் வகையில் பணியமர்த்தப்பட்டனர். 


இதனிடையே LKG / UKG வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளை கையாள அதிக அளவில் தேவைப்பட்டதால், அவர்கள் தொடக்க பள்ளிகளில் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர்.இடை நிலை ஆசிரியர்கள் தொடக்க கல்வி நிர்வாகத்திற்கே அதிக அளவில் தேவை உள்ள நிலையில், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே இருந்த முந்தைய நடைமுறையை பின்பற்றி, அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் தற்காலிக கல்வி செயல்பாட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 


குறைவாக உள்ள 1-5ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த அதிக ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கு அந்த ஆசிரியர்களை பணி நிரவல் செய்தல் இயலாத காரியம். எனவே, அவர்கள் மீண்டும் மீள் பணியமர்த்தபட்டார்கள். எண்ணும் எழுத்தும் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதால் அடுத்த 3 ஆண்டுகளில் தொடக்க பள்ளி மாணவர்கள் இடையேயான கற்றல் இடைவெளி குறைந்து உன்னதமான நிலையை அடைய முடியும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.