கரூர் மாவட்டத்தில் நன்னியூர், மல்லம்பாளையம் பகுதிகளில் அரசால் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளுக்கு அரசின் பல்வேறு கனிம சட்ட விதிகள், பல்வேறு வகையில் மீறப்பட்டே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையிலான குழு கூறியுள்ளது.


 



 



 


 


கரூர் மாவட்டத்தில், நன்னியூர் மற்றும் நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்) ஆகிய இடங்களில் புதிதாக அமைக்க திட்டமிட்டிருக்கும் புதிய மணல் குவாரிகளை கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகளும் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், சாமானிய மக்கள் நலக்கட்சி பொதுச் செயலாளர் குணசேகரன் காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் விஸ்வநாதன், சண்முகம், ராஜேஷ் கண்ணன், விஜயன், கந்தசாமி, வக்கீல் ராஜகுரு உட்பட பலர் இணைந்து புதிய குவாரிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்விற்கு பின்னர் நிருபர்களிடம் முகிலன் கூறியதாவது:


நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் தென்கிழக்கு எல்லைகளில் இருந்து நேர் தெற்காக 200 மீட்டர் தூரத்தில் உள்ளது ஊர் நத்தம். இங்கு வீடுகள், அரசு கட்டிடங்கள், கோவில்கள் உள்ளன. (300 மீட்டர் தூரத்தில் வீடுகள் இருந்தால் குவாரி அனுமதி கிடையாது). நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் வடமேற்கு எல்லையில் இருந்து, வடக்கு பகுதியில் 700 மீட்டர் தூரத்தில் குமாரபாளையம் படுகையில், வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட காடுகள் உள்ளன. (வனத்துறையின் ரிசர்வ் பாரஸ்ட் பகுதியிலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் குவாரிகள் அமைக்க கூடாது). நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் தென்கிழக்கு எல்லைகளில் இருந்து, 200 மீட்டர் தென்கிழக்கில் நெரூர் கால்வாயில் மதகு உள்ளது. (குவாரி அமையும் இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் ஆற்றிற்குள் நிரந்தர கட்டட அமைப்பு இருக்கக் கூடாது).


 




நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் மேற்கு எல்லையில் இருந்து, மேற்கு பகுதியில் 200 மீட்டர் தூரத்தில் உயர்மின் கோபுரம் டவர் பேஸ்மென்ட் கட்டிடம் அமைத்து கட்டப்பட்டுள்ளது. (குவாரி அமையும் இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் ஆற்றிற்குள் நிரந்தர கட்டட அமைப்பு இருக்கக் கூடாது). இவை அனைத்தையும் விட நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் இடமாக காட்டப்படும் இடங்களில், ஏற்கனவே மணல் முழுக்க அள்ளப்பட்டு மணல் எதுவும் இல்லாத நிலையும், தரையை ஒட்டியே ஆறு ஓடிக் கொண்டுள்ளது. (ஆனால் சுரங்க திட்டத்தில் மூன்று மீட்டர் உயரத்திற்கு மணல் உள்ளது எனவும், அதில் ஒரு மீட்டர் மணல் 4.90 ஹெக்டேர் பரப்பளவில் 48,000 கன மீட்டர் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது).



பொதுப்பணித்துறையின், கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டம் திருச்சி செயற்பொறியாளர், கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளரிடம் இசைவாணை வழங்க கோரி கொடுக்கப்பட்ட ஆவணங்களில், ஆறுகளில் குவாரி செயல்படும் இடத்தை காட்டும் வகையில் கற்கள் நடப்பட்டதாக தனது கையெழுத்துடன் புகைப்படம் கொடுத்துள்ளார். ஆனால் குவாரி செயல்படும் இடத்தை காட்டும் அடையாள கற்கள் அங்கு எதுவுமில்லை.





பொதுப்பணித்துறையினர், அடையாளம் இட்டு காட்டப்பட்டதாக கூறப்படும் கற்கள் அனைத்தும் காணாமல் போய் உள்ளன. அரசின் பல்வேறு கனிம சட்ட விதிகள் இவ்வாறு பல்வேறு வகையில் மீறப்பட்டுதான் இந்த குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முகிலன் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண