கரூரில் பெய்த கனமழையின் காரணமாக சர்க்கஸ் கூடாரம் மழை நீரில் மூழ்கி பொருட்கள் சேதமானது. குழந்தைகளுடன் ஆண்கள், பெண்கள் என 4 குடும்பத்தினர் தவித்த நிலையில்   ஊர் பொதுமக்கள் உதவிக்கரம் நீட்டினர்.


 




கரூர் மாவட்டத்தில்  இரவு பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியை சேர்ந்த சர்க்கஸ் தொழில் செய்யும் நான்கு குடும்பத்தினர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறிய அளவில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்துவதற்காக கூடாரம் அமைத்துள்ளனர். 


 




மாலை முதல் நிகழ்ச்சிகளை துவங்க இருந்த நிலையில், கனமழை பெய்து அந்தப் பகுதி முழுவதும் மார்பளவு தண்ணீரில் மூழ்கியது. பள்ளமான பகுதி என்பதால் அந்தப் பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறாத சூழ்நிலை ஏற்பட்டதால், நான்கு குழந்தைகள் உட்பட ஆண்கள், பெண்கள் என 12 பேர் வெள்ள நீரில் சிக்கினர். 


 




 


சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை நீரில் சிக்கித் தவித்த சர்க்கஸ் தொழிலாளர்களை, அப்பகுதி பொதுமக்கள் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள கட்டிடத்தில் தங்க வைத்து, இரவு உணவு வாங்கிக் கொடுத்துள்ளனர். கனமழை பெய்ததால் பொருட்கள் சேதமடைந்து குழந்தைகளுடன் தவித்து வருவதாகவும், சர்க்கஸ் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.