சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட பாணியில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு காஞ்சிபுரம் சாலையில் புகையை கக்கியபடி சென்ற அரசு பேருந்து. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

பல்வேறு புகார்கள்


தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் குறித்து பல்வேறு விதமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அரசு பேருந்துகளின் படிக்கட்டுகள் கழண்டு விழுவதும் முன்பக்க சக்கரங்கள் கழண்டு விழுவதும் மழைக் காலங்களில் பேருந்து கூரைகளில் இருந்து தண்ணீர் கசிவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

 

இந்தநிலையில் அரசு பேருந்து போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட  திருவள்ளூர் பணிமனை சார்பில் இயங்கும் அரசு பேருந்து ஒன்று அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.

 

திரைப்பட பாணியில்


அந்த வகையில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்து முறையான பராமரிப்பு இல்லாததால், திரைப்பட நடிகர்கள் முரளி - வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட பாணியில் சாலை முழுவதும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகையை கக்கியபடி காஞ்சிபுரம் சாலையில் சென்றுள்ளது.

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி


அவ்வப்போது அதிகரிக்கும் கொசுவை விரட்டும் வகையில், கொசு மருந்து அடிக்கும் வாகனம்தான் புகையை கக்கியபடி சொல்லும், ஆனால் அரசுப் பேருந்து ஒன்று கொசு மருந்து புகையடிப்பது போல புகையை கக்கியபடி சென்ற சம்பவம் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

கொசு மருந்து அடிக்க மாநகராட்சி, அரசு பேருந்தை வாடகைக்கு எடுத்துள்ளது எனவும், தமிழக அரசு பேருந்துகளை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் நிஜமாகி உள்ளது என பொதுமக்கள் கேலியும் கிண்டலும் செய்து உள்ளனர். அரசுப் பேருந்து புகையை கக்கியபடி காஞ்சிபுரம் சாலையில் செல்லும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

சீர்காழியில் நடந்த சம்பவம்



கடந்த சில நாட்களுக்கு முன்பு  மயிலாடுதுறை மாவட்டம் வடரங்கத்தில் இருந்து சீர்காழி நோக்கி A8 என்ற கும்பகோணம் அரசு பேருந்து கழகம் சீர்காழி கிளையை சேர்ந்த அரசு பேருந்து, சுமார் 60 -க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தில் வலது புற முன் சக்கர திடீரென கழண்டு பேருந்தில் இருந்து தனியாக சாலையில் ஓடி உள்ளது. இதனை கண்ட ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தி பெரும் விபத்து ஏற்படாத வண்ணம் செயல்பட்டுள்ளார்.


இதனால் பேருந்தில் பயணம் செய்த பணிகள் உள்ளிட்ட அனைவரும் பெரும் உயிர்ச்சேதம் இன்றி தப்பினர். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் மீண்டும் அரசு பேருந்து, முறையான பராமரிப்பு இல்லாததால் புகையை கக்கிச் செல்வது காஞ்சிபுரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறையாக அரசுப் பேருந்துகளை பராமரிக்க வேண்டும், தினமும் பேருந்து பயணத்திற்கு தயாராகும் முன்பு  முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இருக்க வேண்டும்  என கோரிக்கை பொதுமக்கள் தரப்பில்  எழுந்துள்ளது