தமிழ்நாட்டின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இது!


வாக்குகளுக்காக மக்களை அவதூறு செய்வதா? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..


தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம், நிகழ்ச்சிகளுக்காக வருகைதரும் போது பிரதமர் மோடி தமிழர்களையும் தமிழ் மொழி பற்றியும் உயர்வாக பேசும் நிலையில், வடமாநிலங்களுக்குச் சென்று தமிழர்களுக்கு எதிராக பேசுகிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 


 ”தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை - கோட்பாடுகள் - செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் - மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல!” அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


புகை மூட்டமாக மாறிய காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் சாலையில் புகையை வெளியிட்டப்படி சென்ற அரசு பேருந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசு பேருந்து போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட  திருவள்ளூர் பணிமனை சார்பில் இயங்கும் அரசு பேருந்து ஒன்று அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.அரசு பேருந்துகளின் படிக்கட்டுகள் கழண்டு விழுவதும் முன்பக்க சக்கரங்கள் கழண்டு விழுவதும் மழைக் காலங்களில் பேருந்து கூரைகளின் வழியே மழைநீர் வருவதும் வழக்கமாகிவிட்டதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பேருந்திலிருந்து புகை வந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்..! சிம்ம வாகனத்தில் வரதர்


காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் புகழ் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம்  கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது வருகிறது.  ஸ்ரீதேவி பூதேவியுடன் இறங்கி வந்த ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து,சிறப்பு அலங்காரத்துடன்  வெண்சாமரம் வீச ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஊர்வலமாக  புறப்பட்டு காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காரணமாக, நாளை (22-ஆம் தேதி வாக்கில்) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24- ஆம் தேதி  காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அது, வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக இன்று, தமிழகத்தில் அநேக  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


தொடர் கனமழை: 11 பேர் உயிரிழந்த சோகம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பேரிடர் மேலாண்மை..


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று, கடல் அலை குறித்தும். பொதுமக்களுக்கு கடல்சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.


‘ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய’... கொட்டும் மழையில் நந்தியை மனமுருகி வேண்டிய பக்தர்கள்


திருவண்ணாமலை அண்ணாமலையார்  திருக்கோயிலில் வைகாசிமாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மழை பெய்த போதும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.