2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வார இறுதி நாட்களில் மட்டும் பிரசாரம் செய்து வரும் அவருக்கு, அந்தந்த மாவட்டங்களில் அனுமதி கிடைப்பது பெரிய பாடாக இருக்கிறது. தற்போது, கரூர் பிரசாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கரூரில் தவெக கேட்ட இடங்களுக்கு கட்டையை போட்ட காவல்துறையினர்
தமிழக வெற்றக் கழகத்தின் தலைவர் விஜய், வார இறுதி நாட்களில் பிரசாரம் மேற்கொண்டுவரும் நிலையில், நாளை, அதாவது சனிக்கிழமை அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், கரூரில் அவர் பிரசாரம் செய்வதற்காக லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பேருந்து நிலைய மகோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதையடுத்து, லைட் ஹவுஸ் கார்னரை ஒதுக்குவதாக முதலில் தெரிவித்த காவல்துறை, பின்னர் அந்த இடத்தை ஒதுக்க முடியாது என மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலிக்காத தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் முயற்சி
இதையடுத்து, பிரசாரத்திற்கான இடத்தை தேர்வு செய்து, அதற்கு அனுமதி பெறுவதற்காக, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கரூர் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், விஜய் பிரசாரம் மேற்கொள்ள லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கோரப்பட்டிருந்தது.
ஆனால், பிரசாரக் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை, எத்தனை வாகனங்கள் வரும் என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தால் மட்டுமே, அதை வைத்து இடத்தை ஒதுக்கி அனுமதி வழங்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கேட்ட விவரங்களை நிர்வாகிகளிடம் கொடுத்தனுப்புவதாகக் கூறி, அங்கிருந்து சென்றள்ளார் ஆனந்த்.
தவெக தொண்டர்கள் குழப்பம்
இந்நிலையில், தற்போது வரை விஜய் பிரசாரம் செய்யும் இடம் எது என்பது இறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், தவெக கேட்ட மூன்று இடங்களிலும் காவல்துறையின் அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
நாமக்கல்லில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் இடம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கரூரில் இதுவரை எந்த இடம் என்று தெரியாததால், அப்பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
எனினும், இன்று மாலைக்குள், விஜய் எங்கு பேச இருக்கும் இடம் குறித்து உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது என்னடா சோதனை என்பதுபோல், விஜய் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் சிக்கல் ஏற்படுவதால், தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.