TN DGP: தமிழ்நாட்டின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான கூட்டம், மத்திய குடிமைப்பணிகள் தேர்வாணைய தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டிற்கான புதிய டிஜிபி யார்?
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு டிஜிபி பதவியை வகித்து வந்த சங்கர் ஜிவால், கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய டிஜிபி தேர்வு செய்யப்படும் வரை ஜி. வெங்கட்ராமன் இடைக்கால நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. அப்போது, டிஜிபி பதவிக்கான பரிந்துரை பட்டியலில் தனது பெயரையும் சேர்கக்கோரி மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தொடர்ந்த வழக்கால், நடைமுறைகள் தாமதமாகியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய டிஜிபிக்கான நியமன நடைமுறைகளை விரைவாக முடிக்க யுபிஎஸ்சி ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தான், தமிழ்நாடு காவல்துறை சட்ட-ஒழுங்கு தலைமை இயக்குநர் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத்தலைவர் (ஹெச்ஓபிஎஃப்) பதவிக்கான நபர்களை தேர்வு செய்வதற்கான உயர்நிலைக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
புதிய டிஜிபிக்கான போட்டியில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள்:
பணி மூப்பு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், கே. வன்னிய பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், ஜி. வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கடே மற்றும் சஞ்சய் மாத்தூர் ஆகியோரின் பெயர்கள் புதிய டிஜிபிக்கான பரிசீலனை பட்டியலில் உள்ளன. டிஜிபிக்கள் நிலையில் பிரமோத் குமார், அபய் குமார் சிங் ஆகியோர் இருந்தாலும் அவர்கள் ஆறு மாதங்களுக்கும் குறைவான பணிக்காலத்தையே கொண்டுள்ளனர். இதனால், அவர்களுக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. அதன்படி, மற்ற 6 பேரில் 3 பேரை இறுதி செய்து யுபிஎஸ்சி ஆணையம் மாநில அரசுக்கு பரிந்துரைக்கும். அவர்களில் யாரேனும் ஒருவர் முதலமைச்சரின் ஒப்புதலின் பேரில், புதிய டிஜிபி ஆக நியமிக்கப்படுவர். அந்த வகையில் சீமா அகர்வால் மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் வலுவான போட்டியாளர்களாக இருந்தாலும், தற்போது பொறுப்பு டிஜிபி ஆக உள்ள வெங்கட்ராமனுக்கே பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
யார் இந்த வெங்கட்ராமன்?
கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான வெங்கட்ராமன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆவார். 1996 இல் திருச்செந்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராகத் தனது பணியைத் தொடங்கினார். அதன் பின்னர், சிபிஐயில் எஸ்பி, டிஐஜி மற்றும் சிபிசிஐடி பிரிவுகளில் பணியாற்றினார். 2012 இல் ஐஜியாகவும், 2019 இல் கூடுதல் டிஜிபியாகவும் பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், சங்கர் ஜிவால் ஓய்வுக்குப் பிறகு பொறுப்பு டிஜிபியாக செயல்பட்டு வருகிறார்.
யுபிஎஸ்சி தேர்வுக் குழு..
பொதுவாக மாநில டிஜிபி பதவிக்கான நபர் இரண்டு முறைகளில் தேர்வு செய்யப்படுகிறார். அதில் ஒன்று யுபிஎஸ்சி தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவது. மற்றொன்று, மாநில காவல் ஆணையம் மூலம் தகுதிவாய்ந்த அதிகாரியை மாநில அரசே தேர்வு செய்வது. இவற்றில், யுபிஎஸ்சி தேர்வுக்குழு மூலம் டிஜிபியை நியமிக்கும் வழக்கத்தை தமிழ்நாடு அரசு கடைபிடித்து வருகிறது.
அதன்படி, டெல்லியில் இன்று நடைபெறவுள்ள தமிழ்நாட்டிற்கான டிஜிபி தேர்வுக் குழு கூட்டத்தில், யுபிஎஸ்சி சார்பில் அதன் தலைவர் அல்லது அவரால் முன்மொழியப்படும் ஆணையத்தின் உறுப்பினர், மத்திய உள்துறை செயலாளர் சார்பில் அத்துறையின் சிறப்புச் செயலர், மத்திய காவல் படைகளில் ஒன்றின் டிஜிபி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில், மாநில தலைமைச் செயலர் என். முருகானந்தம், மாநில உள்துறைச் செயலர் தீரஜ் குமார், தற்போதைய பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கட்ராமன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளனர்.