கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட அளவில் பல்வேறு ஊர்களை சார்ந்த மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது தேவைகள் குறித்த புகார்கள் மற்றும் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்து தீர்வு காணப்பட்டது.
அப்போது கரூர் மாவட்டம், தோகைமலையை அடுத்த ஆலந்தூர் பகுதியை சார்ந்த சந்தோஷம் என்ற பெண்மணி, இரண்டு கண்களும் பார்வையற்ற நிலையில், குச்சி கொண்டு நடந்து செல்ல, அவருக்கு கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தினை சார்ந்த உதவி காவல்துறை ஆய்வாளர் சாந்தி, தலைமைக்காவலர் ரேவதி ஆகிய இருவரும், சந்தோஷம் என்ற பெண்மணிக்கு வழிகாட்டியாக மாறி, கலெக்டர் அலுவலத்திலிருந்து வெளியே பேருந்து நிறுத்தம் வரை அந்த குச்சியை கைகளால் பற்றி அழைத்து சென்ற காட்சிகள் காண்போரை மனமுறுகச்செய்தது.
மேலும், ஆங்காங்கே காவல்துறையினரின் செயல் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தாலும், இது போன்ற நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் மிகுந்த வரவற்பை பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல், அந்த பெண்மணியை அந்த இரு காவலர்களும் மினி பேருந்திற்குள் ஏற்றி விட்டதோடு, அந்த பேருந்திற்குள் இருந்த ஓட்டுநரை பார்த்து, அந்த உதவி பெண் காவல் ஆய்வாளர், தம்பி, பார்த்து இறக்கி விடப்பா ! என்று சொன்னதையடுத்து, அந்த உதவி பெண் காவல்துறை ஆய்வாளர் சாந்திக்கும், பெண் தலைமைக்காவலர் ரேவதிக்கும் நன்றியை பகிர்ந்து கொண்ட சந்தோஷம் என்ற மாற்றுத்திறனாளி பெண், நன்றி கூறிய காட்சிகளும் வைரலாகி வருகின்றது.