கரூர்: குளித்தலையில் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பறையில் நாற்காலிகள் இல்லாததால் ரகுபதி என்ற ஆசிரியர், ‘நான் கலைஞர் குடும்பத்தில் இருந்து வந்தவன், ஸ்டாலினை ஆட்சிக்கு நாங்க தான் கொண்டு வந்தோம்’ என்று அரசு பள்ளி வளாகத்தில் ஆவேசமாக பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியை விட்டு வெளியேறினர்.




தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட வட்டாரங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான வட்டார அளவிலான ஆசிரியர்கள் பயிற்சி 1ஆம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.




பயிற்சி அறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிகள் வழங்காமல் பெஞ்சில் அமர அனுமதித்துள்ளனர். இதில் பெஞ்சில் அமர சிரமம் ஏற்படுவதாக வட்டார கல்வி அலுவலரிடம் சில ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்துள்ளனர். ஸ்டாலின் ஆட்சியில் அரசு பள்ளி இப்படித்தான் இருக்கும் என மாவட்ட உதவி திட்ட அலுவலர் தெரிவித்ததாக, கூறி சில ஆசிரியர்கள் கோபத்துடன் வெளியேறி ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் சில மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


இதுகுறித்து மாவட்ட உதவி திட்ட அலுவலரிடம் கேட்டபோது, சில ஆசிரியர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளதாலும் சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தை மையப்படுத்தி சில ஆசிரியர்கள் இதுபோன்று தவறாக கூறுவதாக தெரிவித்தார்.




2 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிக்கே  பெஞ்சில் அமர முடியாமல் முதல்வரை பற்றி பேசும் அந்த ஆசிரியர் 200 நாட்களுக்கும் மேலாக பள்ளி மாணவ மாணவிகள் எப்படி அமர்ந்து படித்து வருகிறார்கள் என்றும் அரசு பள்ளி ஆசிரியர்களே முதல்வர் பெயரை சொல்லி அரசியல் செய்வதாக ஒரு தரப்பு ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.